செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 24 December 2019

புலரும் காலை!

புலரும் காலைப்
பனியும் விலகும்

நீர்த்துளியும் ததும்பும்,
பொன்னொளியும் நிரம்பும்!

வைகறை விடியல் வாசம் தேடி,
கங்குல் ஒடியும் சுவாசம் தேடி!

நிலவினை மறையச்சொல்லி,
புதுக் கதிரினை நிரப்பச்சொல்லி!

எனை வாட்டும் குளிர் தனையும்,
அதில் வாடும் உடல் தனையும்,
உயிரூட்டும் பொழுதே
இவ்வழகிய எழில்
காலை பொழுது!

-செல்வா!

Friday, 6 December 2019

பார்வை!

பார்வை அழகானால் தெரிபவை அழகாகும்!
பார்வை தெளிவானால் தெரிபவை தெளிவாகும்!
பார்வை நேர்த்தியானால் தெரிபவை நேர்த்தியாகும்!

காணும் பொருளில் இல்லை அழகு,
காண்பவர் பார்வையில் உள்ளது அழகு!

நோக்கார் நோக்க புதுயுகம் பிறந்தது!
பறவையை நோக்க விமானம் பிறந்தது!
அகிம்சையை நோக்க சுதந்திரம் பிறந்தது!

இருப்பவை உலகில் அங்ஙனமே இருக்கிறது!
பார்ப்பவர்களின் பார்வையில் புதுயுகம் பிறக்கிறது!
பார்வையை தேற்றினால் பார் நம்வசம்!

வாரீர் தேற்றுவோம்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!


Thursday, 5 December 2019

இளையராஜாவின் இசை!

இளையராஜா இன்னிசையில் நனைந்தால் குளிர் அடிப்பதில்லை ஏனோ?

திகட்டாத இன்பமா இசை?
சலிக்காத இன்பமா இசை?

வலி போக்கும் மருந்திசையா?
களிப்பாக்கும் விருந்திசையா?

மனதினை மாற்றவும்,
மனமதை தேற்றவும்,
வலிமை இசைக்குண்டு!

இசைப்பார் இசைக்க இறைவனே பள்ளி கொள்ளும் பொழுது!
நான் என்ன அற்ப மனிதன் தானே!

இசை மழையே எனை நனைத்திடுவாயாக!

-செல்வா!

Wednesday, 4 December 2019

மனத்தோட்டம்!

மனதின் தோட்டத்தில்,
மல்லிகை மலரட்டும்,
நறுமணம் கமழட்டும்,
வண்டுகள் சூழட்டும்!
தேனீக்கள் அமரட்டும்!
மனதின் தோட்டத்தை
மகிழ்வின் தோட்டமாக்குக!

விதை விதைத்தால் மட்டும் மரமாகாது!
உரமிட்டு, பாத்தி கட்டி களையெடுத்து காக்க,
இட்டது மல்லிகையெனில் நறுமணம் நாடெங்கும் கமழும்!
கலையெடுத்து காக்காவிடில்
மல்லிகை மணமில்லாததாகிவிடும்!

மனதை பேணும் கடமையை நாளும் செய்வோம்!
உழவனுக்கே விளைச்சலின் மகசூல் கிட்டும்!

-செல்வா!

Monday, 18 November 2019

வானமே எல்லை!

மெல்ல மெல்ல ஏறுவோம் வானில்,
வட்டமிட்டு பாடுவோம் வானில்,

திட்டமிட்டு ஆடுவோம் வானில்,
வண்ணமிட்டு காட்டுவோம் வானில்,

கண்களில் கனவுகளால் கண்டதை,
எண்களில் எண்ணங்களால் எண்ணுவோம்!

பண்ணுவோம் முடிந்ததை பண்ணுவோம்!
பண்ணுவோம் முடியும் வரை பண்ணுவோம்!

வாழும் வரை வாழ்வதல்ல வாழ்க்கை,
வீழும் வரை விடாமல் வாழ்வதே வாழ்க்கை!

-செல்வா!

Saturday, 16 November 2019

தேவை!

தேவை கண்டுபிடிப்புகளின் தாய்,
மனிதஇன வளர்ச்சிக்கு அச்சாணி,

உணவுத்தேவை வேளாண்மைக்கு வித்திட்டது,
உறைவிடத்தேவை கற்காலத்திற்கு வித்திட்டது,
உடைத்தேவை தொழிற்கருவிகளுக்கு வித்திட்டது,

தேவை ஒன்று இல்லையேல்,
மனிதன் தூங்கியே கழித்திருப்பான்,
தேவை ஒன்று இல்லையேல் மனிதன் தேங்கியே கிடந்திருப்பான்!

இன்று நாம் மென்றுணரும் அத்தனையும்,
என்றோ நாம் கண்டுணர்ந்த கனவின் விழைவே!

தேவையில்லையேல் இன்று மொழியிருந்திருக்காது!
தேவையில்லையேல் இன்று எதுவும் பிறந்திருக்காது!

தேவை உள்ளவரை மதிப்புமுண்டு,
இதை உணர்ந்தார் வாழ்ந்தும்முண்டு!

-செல்வா!

Thursday, 14 November 2019

கலக்கம் தீர்ந்துபோகும்!

கலக்கம் எல்லாம் தீர்ந்துபோகும்,
கவலை எல்லாம் மாறிப்போகும்!

காலம் எனும் மருந்து உண்டு!
கடமை எனும் நெறியும் உண்டு!

உன்னோடு பயணிக்க உலகம் உண்டு,
எங்கு சென்றாலும் பின்தொடரும் நிலா உண்டு!
எங்கு சென்றாலும் உடன்வரும் விண்மீன் கூட்டம் உண்டு!

கலங்கும் பொழுது மனதிடம் விலக்கிக்கொள்,
பாதை கடினம் தான், ஆனால் பயணம் இனிதே!

கலங்கும் பொழுது மனதிடம் விலக்கிக்கொள்,
பயணம் நெடிது தான், ஆனால் முடிவு இனிதே!

வீசி வரும் மேகத்தை திருப்பி மழையாய் மாற்றும் வல்லமை மலைக்கு உண்டு,
வீசி வரும் சோதனையை திருப்பி சாதனையாய் மாற்றும் வல்லமை நமக்கும் உண்டு!

வாழ்க்கையே நம்பிக்கைதான்,
வாழ்க்கை நம்கைகளில் தான்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!

Tuesday, 12 November 2019

விடியலைத்தேடி!

உறக்கமிலா விடியலில்லை,
உறங்கியவர்கள் எதையும் தவறவிடவில்லை,
நேரத்தை தவிர எதையும் தவறவிடவில்லை!

காலை உறங்கிய நாட்களை எப்படி மீட்பது என,
இரவு முழுவதும் யோசித்தே தூங்கினேன் அவ்வாறு தூங்கி,
மற்றொரு காலையும் விடியாமல் கழித்தேன்!

இனிவரும் நாளிளாவது உறக்கம் உடலுக்கென கொள்வேன்,
விடியலை உள்ளுணர்வுக்கென கொள்வேன்!

இதுவரை கழிந்தது கடனாக போகட்டும் விட்டுவிடு!
இனிவரும் காலமாவது சேமிப்பாக இருக்கட்டும் விழித்தெழு!
ஒரு கை பார்க்கலாம்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!

Thursday, 7 November 2019

குழந்தை!

அந்தக் குழந்தை அவ்வளவு அழகானது,
மழலை குணம் அவ்வளவு மகிழ்வானது,

பேச்சு புரிய வேண்டியதில்லை,
குரல் சத்தமுற வர வேண்டியதில்லை,
மழலையின் குணமே மகிழ்வுதான்!

கைகளில் பேசி,
காதுகளில் சிணுங்கி,
வாயினால் முத்தமிட்டு,
முதுகில் அம்பாரி செய்வது,
யாருமிலை மழலையே மகிழ் நன்மழலையே!

-செல்வா!

Wednesday, 6 November 2019

மழலை மான்!

மான் கண்ட மழலைக்கு 
தேன் உண்ட மகிழ்வோ!

ஈர் மழலை கண்ட மானுக்கு,
மாரி பெய்திட்ட குளிரோ!

கன்று இரண்டு அருகில் நிற்க,
கட்டி இறுகித் தழுவி நிற்க,
காண்பது மா மழையோ,
இது மழலையின்
அன்பு மழையே!

கார் மேகம் தூவாமல் காத்திருக்க,
கனக பூ மலராமல் மௌனிக்க,
பூலோகம் சுற்றாமல் வியக்க,
ஊர் கவனம் இங்கே நிற்க,
பரிமாறுவது அன்புதான்,
மனிதன் மறந்த அன்பை,
மழலை நினைவூட்டட்டும்,
அன்பே என்றும் அறம்,
அன்பே சிறந்த தவம்!

-செல்வா!

Tuesday, 5 November 2019

இந்த நாள் இனிய நாளே!

உலகில் யாதோர் மூலையில்,
நினையாதவை நிகழும் பொழுது,

உலகில் யாதோர் மூலையில்,
முடியாதவை நிகழும் பொழுது,

பூவாய் புலர்ந்த இந்நாள்
இலங்கும் பொன் நாளே!

புவிக்கோர் கதிரவன் உண்டு,
அவன் வந்து சென்று உயிரூட்டம் கொடுப்பதுண்டு!
அங்ஙனமே மனிதனுக்கோர் மனமுண்டு அதில் நல்லெண்ணம் பல முளைப்பதுண்டு!

மனமென்னும் தோட்டத்தை
மாயையில் மயங்காமல் பேணுவோம்!
நல் எண்ணம் தனை விதைத்து,
தீய எண்ணம் தனை அகற்றிடுவோம்!
ஒரு உழவன் போல் மனதினை தேற்றுவித்தால்!
ஐம்புலமும் நலமாகும் நல்லவை சாத்தியமாகும்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!




Sunday, 15 September 2019

மழைமேகம்!

கருங் கூந்தல் கொண்டு சிணுங்கி
ஊரெல்லாம் வனப்பில் ஆழ்த்துபவளே!

பரும் தூரல் கொண்டு முழங்கி காடெல்லாம் செழிப்பில் ஏற்றுபவளே!

அவனி எங்கும் உலவும் மங்கை,
எவரிடத்திலும் தங்கிடாத மடந்தை,
எட்டுத்திக்கும் ஒலிக்கும் சலங்கை,
காடென, மேடென, கடலென, புனலென,
வஞ்சகம் பாரமல் முத்தும் குழந்தை!

தினம் தினம் விருந்தளிக்க இந்நிலம் காத்திருக்கு,
உனது வரவு வேண்டி பல உயிர்கள் தவித்திருக்கு,
பருவம் தவறாமல் வந்து என் வயதை கூட்டிடு!
புருவம் உயர்த்த நீ விண்ணில் வீற்றிரு!

பஞ்சனை தருகிறோம்,
ரத்தின கம்பளம் விரிக்கிறோம்,
விருந்தினராய் வந்து செல்லாமல்,
வீற்றிருக்க வந்திடு விடைபெறாமல் வீற்றிரு!

-செல்வா

Saturday, 14 September 2019

மீண்டெழும் தமிழ்!

தமிழை முடக்க மாபெரும் முயற்சி!
தமிழை ஒடுக்க மாபெரும் பயிற்சி!

சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி என துரத்தும் ஓர் பட்டியல்,
ஆதிக்க வழியையும், ஆதிக்க போரிலும் சாதித்தது தமிழ் தான்!

அந்நிய மொழியை மதத்தில் ஏற்றி கருவரை மொழியாக மாற்றினர்!
இன்னொரு மொழியை வளர்ச்சியாக காட்டி வீட்டினுள் ஏற்றினர்!
மற்றொரு மொழியை திணித்து ஒருமைப்பாடு காக்க நினைத்தனர்!

ஊடுருவி பார்த்தனர், அழிக்க முடியவில்லை!
அவமதித்துப்பார்த்தனர், அழிக்க முடியவில்லை!
இன்றோ அடக்கிப் பார்த்தனர்,
அதுவும் முடியவில்லை!

இருக்க இருக்க வைரத்தின் மதிப்பதிகம்!
பழுக்க பழுக்க இரும்பின் வலிமை அதிகம்!
தினம் தினம் தமிழ் திடமாக பிறக்கிறது!
உலகின் ஏதோ ஓர் மூலையில் புதிய பரிணாமம் பெறுகிறது!

தமிழ் அரியணை ஏறும் நாள் தூரமில்லை!
தமிழ் வீடுகளில் வீற்றிருக்கும் நாள் தூரமில்லை!

தாயே தமிழே, நீ வாழி!

-செல்வா


Monday, 15 July 2019

நான்!

மழை சாரலில் நனையும் நாணல் நான்,
பனித்தூரலில் மிளிரும் புல்வெளி நான்,

எத்தனை முறை உள்ளிழுத்தாலும் குறையாத மணல் நான்,
எத்தனை முறை அடித்தாலும் ஓயாத கடல் அலை நான்!

நான் யாராக இருந்தாலும்,
நான் நானாக உணர்ந்ததில்லை,
ஏதோ ஒன்று எனை துரத்துகிறது,
அதன் பெயர் மட்டும் அவ்வப்போது மாறுகிறது,
சிலநேரம் சடங்கு, பலநேரம் கடமை,
சிலநேரம் சமுதாயம், பலநேரம் கடன்!

அத்தனையும் என்னிலிருந்தும் ஒன்றுமில்லாதவனானேன் பலநேரம்,
என்னை மறந்த நேரங்களில் மட்டுமே நான் நானாக இருந்ததை உணர்ந்தேன்!

நான் யாரோ, நான் அறிவேனோ!

-செல்வா

Tuesday, 16 April 2019

தேர்தல் ஓட்டு!

மக்களாட்சியில்
சாதாரண மனிதனின்
குரல் எங்கேனும் எடுபடுமா?

அடிப்படைகள் கிடைக்காத போது,
அநீதிகள் இழைக்கப்படும் போது,
உடமைக்கு குந்தகம் வரும் போது,
உண்மைக்கு தீமை ஏற்படும் போது,
ஊழல் தலைவிரித்தாடும் போது,
ஊடகங்கள் ஊமையான போது,

என்ன செய்வான் அப்பாவி மனிதன்?
எல்லாம் இழந்த மக்களிடமும்,
வலிமையான ஆயுதம் உள்ளது!
தேர்தலின் ஓட்டே அவ்வாயுதம்!

ஆம், ஓட்டு உங்கள் உரிமை!
எதிர்காலத்தினை தீர்மானிக்கும் கருவி!
ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்தால்!
மாற்றம் நடந்ததே தீரும் நடந்தேறும்,
மக்கள் ஒன்றுபட நிற்க வேண்டும்,
உணர்ந்து செயல்பட வேண்டும்!

எட்டிக்கிடைக்காததற்கும்,
தட்டிப்பறிபோனதற்கும்,
விடை நம்கையிலே!
விழிப்போம்!
ஓர் ஓட்டு,
நாளை,
நமதே!

-செல்வா


Friday, 12 April 2019

நிம்மதி!

கஷ்டங்கள் இல்லா வாழ்வில்லை,
எப்போது விடியும் தெரியவில்லை!

உறங்க சென்றால் உறக்கமில்லை!
மனதில் இடிபோல் முழக்கமுள்ளே!

கவனம் மட்டும் சிதறவில்லை!
கலக்கமாய் மனது இருக்குதுள்ளே!

தோல்வியை மட்டும் சந்தித்தவனுக்கு,
தோற்பது ஏமாற்றத்தை தருவதில்லை!
தாமதமான வெற்றியோ ருசிப்பதில்லை!

எப்படித்தான் வாழ வாழ்வை?
எப்படியும் வாழ்வது வாழ்வல்லவே!

மதம் படி வாழவா, 
மனது படி வாழவா! 
இனம் கண்டு வாழவா,
இயல்பு கண்டு வாழவா!
பணம் பார்த்து வாழவா!
பழகிப் பார்த்து வாழவா!

விடை கண்டு விடை கண்டு,
காலங்கள் நிற்காமல் ஓடினாலும்,
நித்தம் நிம்மதி மட்டும் தேடுகிறதே!

எதையும் யோசிக்காதே மனமே!
நீயே உன் நண்பனும் எதிரியும்!
நண்பனுக்கு துணையாயிரு,
நாளும் நன்மையாயிரு,
உனது வெற்றி எனதே!

-செல்வா

Tuesday, 19 March 2019

பொள்ளாச்சி கொடூரம்!

தெரியாமல் யாருமில்லை,
உணராமல் தான் உள்ளோம்!

மெத்த படித்து பயன் என்ன?
ஊட்டி வளர்த்து பயன் என்ன?
காம ஆசை தலைவிரித்தாடுது!
காசு பார்க்க கண்டவழி தேடுது!

இங்கு காசு தான் எல்லாம் என சொல்லி வளத்தாச்சு!
தானும் தன்னதும் முக்கியம்னு சொல்லிமுடிச்சாச்சு!
பிறருக்கு வலிச்சா என்ன,
இல்லை பிறர் குடி கெட்டா என்ன?

இன்று நடந்த சம்பவம் பெரும் துயரம்!
இனி இது நடக்காமல் இருக்க உறுதிகொள்க!

பெற்றோர்களே ஆண்பிள்ளையை சொல்லி வளர்க்க!
பெண்பிள்ளையை உரக்க பேசும்படி வளர்க்க!

சமுதாயமே தவறுகளை தட்டிக்கேட்க!
சட்டமே தீங்கானவர்களை சிறையிடுக!

இது நம் அனைவருக்குமான கடமை!
இன்று நமது வீடு தீக்கிறையாகாமல் இருக்கலாம்!
நாளை மாறாவிடில் என்ன நிச்சயம்?

பெண்மையின் பெருமை பேசாது!
பெண்ணை சகமனுசியாய் பார்ப்போம்,
மதிப்போம்! உணர்வோம்!

-செல்வா

Sunday, 10 March 2019

யாரை நம்புவது!

கைரேகை பார்த்து பார்த்து
பல ராசிக்கற்கள் அணிந்து
தனம் சேருமா பணம் சேருமா
என தவித்தான் அக்காலத்தில்!

இன்றோ குன்றேரா சாமிகள்,
காட்டை அழித்த பாவிகள்,
கோடியில் புரளும் கேடிகள்,
சில்மிசம் செய்யும் பாதிரிகள்,
எத்தனை ஏமாற்றுக்காரர்கள்?
யாரை நம்புவது என்ற நிலை!
அப்பாவி மனிதன் அல்லாடுகிறான்!

தன்னை சாமி என்கிறான் பாவி!
எதை துறந்தான் துறவியாவதற்கு?
பகுசாய் பங்களா, சொகுசாய் வாகனம்,
சேவைக்கு சேவகர்,ஆசைக்கு சர்வம்,
காசுக்கு தரிசனம்,கார்ப்பரேட் விளம்பரம்,
இத்தனையும் இக்கால (ஆ)சாமிகளிடத்தில் உண்டு!
இதை கண்டு குழம்பாமல் இருப்பவன் வாழ்வு நன்று!

மதம் தலைக்கேறினால் மதயானையின் கதிதான்!
மதம் புனிதமானது இத் தரகர்கள் அபாயமானவர்கள்!

மெய்பக்தி அப்பழுக்கற்றது!
யாருக்கும் தீங்கிழைக்காதது!
வேடம் பூண்ட கயவன் கொடியவனே!
மத போதையில் மனிதம் இழக்காதீர்!


-செல்வா

Sunday, 3 March 2019

மனமென்னும் மாயாவி!

மனமென்னும் மாயாவி
தறிகெட்டு ஓடுதே!
அச்சாணி கழன்ற வண்டியாகி தடம் கெட்டு புரளுதே!

எதை செய்ய வேண்டுமோ,
அதை செய்வதில்லையே,
நேரம் வீணாக்கும் பேதையாய்,
காலம் கடத்தி விரயமாகுதே!

சாதித்தவன் முதலில்
மனதை அடக்கினான்
மமதை அகற்றினான்
பற்றை கொண்டான்
எச்சுகம் இழப்பினும்
இலக்கை தொடவேண்டும்
வெற்றி பெற்றாக வேண்டும்
என்பதை இயல்பாக்கினான்!

வெற்றிக்கு தெரிந்தால் மட்டும் போதுமா?
செயல்படாத இரும்பு துருப்பிடிக்கும்
கட்டுப்படுத்தாத மனது தறிகெடும்
அறிந்து தெரிந்து செயல்படு மனமே!
தாமதம் கொள்ளாதே, காலம் சிறிதே நம்மிடம்!

-செல்வா


Wednesday, 27 February 2019

மென்மை!

மென்மை என்பது பூவின் இதழ் என்றிருந்தேன்
உதவும் நல்ல கரம் பார்க்கும் வரை!

மென்மை என்பது இனிய இசை என்றிருந்தேன்
ஆறுதல் தரும் கனிந்த குரல் கேட்கும் வரை!

மென்மை என்பது அவள் அன்பு என்றிருந்தேன்
அன்னை தெரசாவின் மனிதம் காணாத வரை!

மென்மை என்பது உத்வேகத்தின் எதிரி என்றிருந்தேன்
அன்னல் காந்தியின் போராட்டம் படிக்காத வரை!

மென்மை என்பது பனி படர்ந்த இலை என்றிருந்தேன்
ஒரு குழந்தையின் கைவிரல் எதர்ச்சையாய் தீண்டும் வரை!

மென்மை வெற்றியின் எதிரியில்லை,
மென்மை காற்றில் கரைந்து விடுவதுமில்லை,
அவசர உலகக் காரர்கள் காண்பதுமில்லை,
மென்மையை போற்றுவதுமில்லை!

வன்மை அத்தனையிலும் ஒழிந்து மென்மை பூக்கட்டும் இவ்வுலகில்
பேசித்தீர்க்க வழிஇருக்க சண்டை எதற்கு?

-செல்வா


Monday, 28 January 2019

மகளுக்கு ஒரு மடல்!

மகளை பெற்றதினால் பாக்கியமுற்றேன்,
தாயை தூக்கி தாலாட்டும் பாக்கியம் பெற்றேன்,

தங்கை, அக்கா கோராத அளவில் உரிமை கோருகிறாயே,
தாய், தாரமிடம் இல்லாத அளவில் அதிகாரம் செய்கிறாயே,
எளிதில் கோபிக்கும் எந்தன் சுபாவத்தை தகர்த்தெறிந்தாயே!
வடிவமில்லாமல் இருந்த என் வாழ்விற்கு வடிவை தந்தாயே!

உன்னை பெற்றதால் எந்தன் வாழ்வு பூர்த்தியுற்றதோ?
உன்னை ஆரத்தழுவியதால் பாவம் அற்று தீர்ந்தனவோ?

அப்பா என்ற ஒரு வார்த்தையில் கட்டிப்போடும் மரகதமே,
மணாளன் வீடு புகும் மங்கையே, கணவனிடம் தந்தையை தேடாதே!
உன் வாழ்வு சிறக்கட்டும் வீடு தழைக்கட்டும்!

-செல்வா

Monday, 14 January 2019

பொங்கலோ பொங்கல்!

தை திருநாள் தமிழர் பண்பாட்டு பெருநாள்,
நாடு செழித்து மகிழும் திருநாள்!
இனிப்பாய் தித்திக்கும் நனிநாள்!

பழையது கழிந்தது,
புதியது மலர்ந்தது,
நல்ஆண்டு பிறந்தது,
தமிழில் தை பிறந்தது,

இடர்கள் ஓடட்டும்,
இன்னல் தீரட்டும்,

வீடு சிறக்கட்டும்,
நாடும் வளரட்டும்,
காடு செழிக்கட்டும்,
கால்நடை வாழட்டும்,
இன்பம் பொங்கட்டும்,
நல்லவை தொடரட்டும்,
நல்லவர்கள் பெருகட்டும்,
தொழில்கள் முன்னேறட்டும்,
பண்பாடு தழைத்து ஓங்கட்டும்,
தமிழ் எத்திசையும் முழங்கட்டும்,

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

🌞🌾🌱🌴🌲🌳✨

-செல்வா



Thursday, 3 January 2019

புத்தாண்டு 2019!

மழை தரும் மேகங்களே வாருங்கள் புது வருடம் வந்தது!
தேன் சுரக்கும் பூக்களே மலருங்கள் புது வருடம் வந்தது!

அலுவலகத்தில் ஆண்டு இலக்கு இருப்பது போல்,
உங்களுக்கு ஆண்டு இலக்குகள் இல்லையோ!

சென்ற வருடம் பெய்யாத மழையே இந்த வருடம் இதமாக பெய்க!
கடந்த ஆண்டு முகம் மாற்றிய இயற்கையே இவ்வாண்டு காப்பாயாக!

கரை புரண்டு ஓடும் காவிரி வேண்டும்!
நாலு  போகம் விளையும் மண் வேண்டும்!
தமிழ் மணம் வீடெங்கும் கமழ வேண்டும்!

இளைய தலைமுறைக்கு நல்ல வேலை வேண்டும்!
நாட்டை ஆள தகுதியான கோமான் வேண்டும்!

விண்ணும் மண்ணும் மக்கள் மகிழ்ச்சியில் முழங்கிட வேண்டும்!
இந்தாண்டில் இத்தனையும் நிகழ்ந்தேற வேண்டும்!

வேளாண்மை வளர வையகம் தழைக்கட்டும்!
வாழும் நாளில் சொர்க்கமாக இவ்வாண்டு மலரட்டும்!
நாடெங்கும் குறையில்லாமல் மக்கள் மனம் நிறையட்டும்!

-செல்வா