செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 31 May 2018

வாழ்க்கை ஓர் அரிய பொக்கிஷம்!
அதன் ஒவ்வொரு நாளும் நம்வசம்!

வாழ்க்கையில் தென்றல் காற்றாக இருப்போமாக!
மற்றவர் இதமாக உணர்ந்துகொள்ள!
வாழ்க்கையில் தீபமாக இருப்போமாக!
பாதைக்கு வெளிச்சமாய் பிறர் பயணிக்க!
வாழ்க்கையில் நீராக இருப்போமாக!
பிறபொருள் விளைந்து, தானும் ஓர் உணவாக பயன்தர!
வாழ்க்கையில் மரமாக இருப்போமாக!
நல்ல காய், கனி, நிழல் மற்றும் பல்பொருளாய் பயன்தர!
வாழ்க்கையில் ஒரு புத்தகமாக இருப்போமாக!
பிறர் பயின்று அவர்கள் வாழ்வு சிறப்புற!!!

உன்னால் முடியும் என்று ஒருவர் கூறினால், 
அனைவருக்கும் புது உலகம் படைக்கும் துணிவு வரும்!

தினம் தினம் புதுமை படைத்திடுவோம்,
நமது சிந்தனையால், பேச்சால், செயலால்!

நாளை நமது கையில் தான், 
இன்று நம்சிந்தனை இலக்கை நோக்கி இருக்கப்பெறின்!!!

விழி.எழு.விருட்சமாகுக

-செல்வா




Monday, 28 May 2018

அரசாணை வந்தது!
ஆலைக்கு மூடுவிழா!
கட்டுக்குள் நிற்காத தவிப்பிற்கான முடிவுரை!
மக்கள் குரலுக்கான மணிமகுடம்!

இந்த வெற்றியின் விலையோ மிக அதிகம்!
விட்டுச்சென்ற வெற்றிடமோ மேலும் அதிகம்!
ஒன்றா, இரண்டா பதிமூன்று உயிர்கள்!
அராஜக ஆட்சியில் சுட்டு வீழ்த்தப்பட்ட தியாகிகள்!
சுதந்திர திருநாட்டில் தோட்டாவினால் உயிர் நீர்த்த முதல் பெண்!
ஓர் தனியார் ஆலை மூட அறவழியில் போராடி உயிர் நீர்த்தாள்!
இன்றும் என்றும் வரலாறாய் மாறிப்போனாள்!

ஐந்து நாள் முந்தி மூடியிருந்தால் இவ்வுயிர்களும் கொண்டாடி இருந்திருக்கும்!
மன்றாடி, அகிம்சையில் போராடி இருபதாண்டுக்குப்பின்னான வெற்றி!
இனியும் காலம் தாழ்த்தாத செயலுக்கு நன்றி!

வாழ்ந்த பூமி மலடாகி, பெய்கின்ற மழை அமிலமாகி,
சுவாசிக்கும் காற்று விசவாயுவாகியதன் விளைவே இந்த தொடர் போராட்டங்கள்!
ஒர் இரு நாட்களல்ல இருபது ஆண்டிற்குள் பலமுறை பூட்டப்பட்டு,
மீண்டும், மீண்டும் திறக்கப்பட்ட ஆலை அது!
இன்று மீண்டும் ஓர் தற்காலிக பூட்டு!
நீதிமன்றத்தில் வழக்கு இருக்க,
எப்படி சிந்திப்போம் இதுமுழுவெற்றி என!

எங்கள் நல்வாழ்வு,
உங்கள் நோக்கம் எனில்!
இத்தீர்ப்பு என்றும் மாறாது!
நாளை மேல் நம்பிக்கை கொள்வோம்!
இன்று இத்தீர்ப்பு உயிர்நீர்த்த தியாகிகளுக்கு சமர்ப்பணம்!

வாழ்க தமிழ்! வாழ்க தமிழர்!
வாழ்க செந்தமிழ் நாடு!

வாழிய! வாழியவே!

-செல்வா
மறதி இந்நாட்டின் தேசிய வியாதி!

நாட்கள் மிகவேகமாய் ஓடுகின்றன!
சுயபிரச்சனைகளை கடந்து சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டோர் இன்று நூற்றில் சிலர்!
மற்றவரோ காற்றில் வீசும் நறுமணத்திற்கு இணங்க மாறிக் கொண்டே இருக்கிறார்கள்!

என்னால் என்ன செய்ய முடியும் என்ற நிலை தாண்டி,
ஒவ்வொருவரும் இன்று ஊடகவியலாளரே!
நவீன காலத்தில் இன்றைய தகவல் பரிமாற்றம் அவர்களின் கையில்!

காற்று மற்றும் நீர் மாசுபடக்கூடாது என்பதே,
ஆலை இயக்கத்திற்கான அடிப்படை விதிமுறை!
ஆனால் இதை ஆலை ஒருபோதும் கடைபிடிக்கவில்லை!
அநீதியாக நடக்கும் ஆலையை யாரும் கண்டிக்கவில்லை!
இந்தியாவிற்கு தாமிரமே முக்கியம் என்பதுதான் ஸ்டெர்லைட்டிற்கான நிலைப்பாடு!

தொடர் போராட்டத்தை கண்டுகொள்ளா அரசு!
நூறாவது நாள் முற்றுகை போராட்டத்தை கலவரமாக சித்தரித்து!
அப்பாவி மக்களின் உயிர்களை காவு வாங்கியது!
ஒரு உயிர்க்கு சில லட்சங்கள் ஈடாகுமா?

அந்த நாள் ஓர் கருப்புநாள்!
தமிழக வரலாற்றில் படிந்த இரத்தவடு என்றும் மறைந்துபோகாது!

கிழிக்கப்படுவது தேதியாக இருக்கலாம்!
கடந்து செல்வது நாட்களாக இருக்கலாம்!
ஓடுவது வாரமாக இருக்கலாம்!
ஆனால் மங்கா நினைவுகள் கல் மேல் பொறித்த கல்வெட்டுகள்!
காயத்தில் ஏற்பட்ட ஆறா வடுகள்!

தழும்புகள் மறைவதுமில்லை! மன்னிக்கப்படுவதுமில்லை!

காலம் வரும்!
காத்திருப்போம் நாமாக!
ஓர் ஓட்டு உங்களின் தலையெழுத்தையும்,
எங்களின் தலையெழுத்தையும் சேர்த்தே மாற்றும்!

நம்பிக்கையுடன்!

#Standforthoothukudi

-செல்வா






Saturday, 26 May 2018

ஒரு முதலாளிக்கு கைக்கூலிகளாய்!
காசுக்கு கையேந்தும் அடிமைகளாய்!
பணத்திற்கு பணியும் துரோகிகளாய்!

சொந்த மக்களை கொன்ற பாவிகளாய்!
அமைதிப்போராட்டத்தை குலைத்த நரிகளாய்!
போராட்டத்தை கலைக்க காலம் தேடிய புலிகளாய்!
ஒன்றும் அறியா அப்பாவிகளை கொன்று குவித்த பாவிகளாய்!

எந்தவித முன்னறிவிப்புமின்றி தாக்கிய கோழைகளாய்!
அநீதிக்கு துணை நின்ற தூண்களாய் உள்ளாய்!

மரண தண்டனை பெற்றவனுக்குக்கூட கடைசி ஆசைக்கு உரிமை உண்டு!
ஆனால் எம்மக்களுக்கோ அதற்கு கூட ஓர்கணம் கிடைக்கவில்லை!

இழக்கும் வயதில் அவர்களும் இல்லை!
துறக்கும் வகையில் அவர்களின் துன்பமும் இல்லை!

இனி இல்லை என்ற சொல்லே ஒலிக்க வேண்டும்!
பணத்திற்காக எவனுக்கும் ஓட்டில்லை!
மக்களை கொன்றவனுக்கு ஆசனமில்லை!
கபட நாடக காரணுக்கு பதவி இல்லை!
நாங்கள் விழித்துவிட்டோம். இனி ஒருபோதும் உறங்கமாட்டோம்!
காலம் வரும் அன்று எங்கள் ஓலத்திற்கான விடைகிடைக்கும்!

ஓர் ஓட்டு! அதில் உன் பலம் காட்டு!
இழந்ததை கணக்கிட்டு!
நல்வழி காட்டு!

விழி. எழு. சுடர்விடு!

#Bansterlite
#Standforthoothukudi

-செல்வா


Friday, 25 May 2018

யார் காரணம்?

யார் காரணம் எங்கள் துன்பத்திற்கு! கார்பரேட்டுகளா?
இல்லை அதனிடம் பணம் வாங்கிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளா?

எதற்காய் சுட்டீர்கள் அறவழியில் போராடியவர்களை அச்சுறுத்தவா?
இல்லை இந்த அரசு மக்களுக்கானது அல்ல என்ற ஐயம் தீர்க்கவா?
வீதி வந்து வயது,பாலினம் பாராமல் போராடிய துணிவை அடக்கவா?
ஒன்றா, இரண்டா பதிமூன்று உயிர்கள் அல்லவா, இன்னும் பல வலிகள் அல்லவா!

ஒன்றாய் கூடிய மக்களின் உணர்வு புரியவில்லை!
அவர்களின் துணிவு கண்டு உங்கள் நெஞ்சம் பொறுக்கவில்லை!
அதன் ஒற்றுமை கண்டு உங்கள் அஸ்திவாரம் நிலைக்கவில்லை!
தனியார் ஆலைக்கு கொடுத்த முன்னுரிமையை,
சொந்த மக்களுக்கு கொடுக்க தவறியது ஏன்?

எந்தவித முன்அறிவிப்புமின்றி சுட்டு வீழ்த்தினாய்!
நியாயம் கிடைக்க வேண்டும்!

மீறப்பட்ட மனித உரிமைக்கு, நீதி கிடைக்க வேண்டும்!
நோய் பரப்பும் ஆலைக்கு நிரந்தர  பூட்டு போட வேண்டும்.

#Bansterlite
#Standforthoothukudi

-செல்வா







Thursday, 24 May 2018

காசு செய்த அரசியல்!

அரசியல் தெரியா பாமரனும் இன்று அரசியல் பயின்றுவிட்டான்!
ஆனால் அதற்கு கொடுத்த விலை தான் அதிகம்!

மேடைகளில், கடைவீதிகளில், தெருக்கள் வரை,
பேசப்பட்ட அரசியல் இன்று வீடுகளினுள்ளும் பேசப்படுகிறது!
சாதி மற்றும் பணத்திற்காக ஓட்டுப்போட்ட மக்கள் மனநிலை மாறியது!
இன்று படும் அவலநிலைக்கு பணமே காரணம் என்ற புரிதல் வந்தது!

பணம் வாங்கியதால் உரிமையை இழந்தோம்! 
நாம் கொண்ட உடமையை இழந்தோம்! 
இன்று உற்றவரின் உயிரையும் இழந்தோம்!
பணவாத அரசியல் அதன் கோரத்தை காட்டிவிட்டது!

விழித்திடுக மக்களே, உங்கள் விசுவாசத்தை,
நமக்கான கொள்கை வைத்திருப்பவனிடம் காட்டுங்கள்!
நமக்கானவனை தேடுங்கள், தேர்ந்தெடுங்கள்!
பிரச்சனை வரும் போது கைகட்டி வேடிக்கை பார்க்காமல்!
முதல் ஆளாக எழுந்து, நமக்காக போராடி,
நம் உரிமையை நிலைநாட்டுபவனை கண்டுகொள்ளுங்கள்!

இதுவே மாற்றத்திற்க்கான முதல்படி! நிரந்திர வழி!
மாற்றம் நம்முள்ளே இருந்து ஆரம்பிக்கட்டும்!

விழு! எழு! சிந்தித்து செயல்படுக!

#BanSterlite
#Standfortuticorin

-செல்வா

Wednesday, 23 May 2018

மனிதாபிமானம் எங்கே போயின!
மக்களின் கதறல்கள் கேட்காமல் போயின!
சனநாயகம் அரசு காணமல் போயின!

பசுமை வளாகத்தில் ராட்சத தொழிற்சாலை கட்டினர்!
சுற்றுச் சூழல் வரம்பு மீறி நச்சுப்புகையை காற்றில் கலந்தனர்!
சுத்தமான காற்றின்றி, மக்கள் நோய்க்கு ஆளாகினர்!
பலநாட்கள் போராடினர், தொடர்ந்து போராடினர்!
குழந்தை,பெரியவர்,ஆண்,பெண்  என்று பாராமல் எல்லோரும் போராடினர்!
அரசோ செவிடாய் மமதையில் இருந்தது!
நூறாவது நாள் போராட்டம் கலவர களமானது!
தோட்டாக்கள் அப்பாவிகளின் நெஞ்சை துளைத்தது!
பதினோரு பேர் குண்டால் உயிர் துறந்தனர்!

துளியும் ஈரமில்லை இவ்வரசிற்கும் அதன் ஆட்சியாளர்களுக்கும்!
இழக்கும் வயதில் அவர்களுமில்லை!
துறக்கும் வகையில் அவர்களின் துன்பமுமில்லை! 

வாக்களித்து தேர்ந்தெடுத்தவர் தள்ளி நிற்க! 
வன்முறை அறியா அப்பாவி மக்கள் வித்தர்!
நேர்மையான பிரதிநிதி இல்லை! 
சாதி,மதம், பணத்திற்காக தேர்ந்தெடுத்தவன் நமக்கில்லை!
உனக்கானவன் எவன் என முடிவு செய், 
அன்று நமக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டும்!

#Ban_Sterlite
#Stand_For_Thoothukudi

-செல்வா

Tuesday, 22 May 2018

தூத்துக்குடி அநீதி!

இந்த நாள் ஓர் கருப்பு நாள்!
அநீதிக்கும் அடக்குமுறைக்கும்,
இடையில் அப்பாவிகள் கொல்லப்பட்ட நாள்!
காவல் அதன் கண்ணியத்தை இழந்த நாள்!
மக்கள் பிரதிநிதி அடக்குமுறையை ஏவிய நாள்!

எங்கனம் மன்றாடுவேன்!
சொந்த நாட்டில் அடிமை அரசு!
மக்கள் நலம் விரும்பா கைக்கூலிகள்!
அப்பாவிகளை சுட்டுக் கொன்ற துப்பாக்கிகள்!
காலில் சுடவேண்டிய துப்பாக்கிகள் குறி தவறினவே!

தன் அடிப்படை உரிமை இழந்தான்!
தன் அடிப்படை உடமை இழந்தான்!
இப்பொழுது போராடி சுவாசிக்க சுத்தமான,
காற்றை பெறமுடியாமல் மூச்சைவிட்டான்!
இளைஞனும், யுவதிகளும் இந்த அற்ப,
அரசியல்வாதிகளால் கொள்ளப்பட்டார்கள்!
ஒருகணம் யாரும் யோசிக்கவில்லை!

மனித நேயம் மண்ணில் புதைக்கப்பட்டுவிட்டது!
அகம் கொண்டவனை, அறம் என்றும் விடாது!
மக்களின் கண்ணீரில் மாண்டு அழியும் இவ்வரசு!!!

#BanSterlite
#Standfortuticorin



-செல்வா 




Monday, 21 May 2018

சிங்காரச்சென்னையில் ஓர்நாள்!

அழகிய காலை பரிதி மிளிர மலர்ந்தது!
ஓயாத ஒசைகள் காதுகளில் ரீங்காரிக்கிறது!
நான் கேட்டு பழகிய தமிழ்தானே என வியப்பு!
அண்ணா, என்னா, குந்து நைனா என துவங்கியது உரையாடல்கள்!

விடுமுறை நாளில் சாலைகளுக்கும் விடுமுறை என்பதை அதன் அமைதி பிரதிபலித்தது!
தார் சாலைகளும் அதன் மீது படிந்த அடர்த்தியான தூசிகளும் மக்கள் நெரிசலுக்கு உதாரணங்கள்!
பாலங்களும், கால்வாய்களும் மக்களடர்த்தியில் புலம்புகிறது!
என் செய்வேன் நானோ! ஒர்நாள் விருந்தாளி!

அழகிய காலை! அற்புதமான நகரம்!
தொடர்கிறது எனது குறு பயணம், 
மின்சார ரயிலின் ஒலி ஒலிப்பானாக!!!
ப்பம்! ப்பம்! ப்பம்!ப்பம்! ப்பம்! ப்பம்!

சிங்காரச் சென்னையில் ஓர்நாள்!

-செல்வா

Friday, 18 May 2018

சுடர்விடு தமிழினமே!!!

தமிழ் என்ற சொல் வியத்தகு வலிமையானது!
பல போராளிகளையும், வீரர்களையும், தீரர்களையும் உருவாக்கியது! 

அவ்வினத்தின் சினம் பொருந்திய வீரத்தை ஒருவரும் நேரிட்டு வெல்லலாகாது!
பகை சூழ்ந்த மன்னர் எல்லாம் பிறர் சூழ்சியாலே மாண்டனர்!
நேராக எதிர்த்து நெஞ்சிலே குத்தியவர் ஒருவரிலர், முதுகில் குத்தியவர் அனேகர்!
கட்டபொம்மன்,தீரன் சின்னமலை, வேலுத்தம்பி, புலித்தேவன், வாஞ்சிநாதன், 
வேலு நாச்சியார், அழகு முத்துக்கோன், பிரபாகரன் இன்னும் பலராவார்!

தமிழுக்காகவும் அதன் மக்களுக்காகவுமே உயிர் நீர்த்தார்!
அவர்களின் எண்ணம், குரல், செயல், நோக்கம் அனைத்துமே ஒருமித்திருந்தது!
உலகம் போற்ற வேண்டியவர்களின் புகழ் குன்ற நம்முள்ளே உள்ள பிரிவுகளே காரணமாயின! 
மொழியின்றி எவ்வினமும் தழைத்துவாழாது, இது தகும் நம்மினத்திற்கு!
ஆனால் இன்றோ படித்தவன் கலைய வேண்டிய சாதியை தூக்கி முன்னெடுக்கிறான்!
ஆனவக்கொலைகளுக்கும், சாதி சண்டைகளுக்கும் பஞ்சமில்லை!

மாறுகின்ற உலகில் மாறாதது நம்தமிழ் பற்று ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்!
ஈழத்தில் இழந்த உறவுகளுக்கு செய்யும் சிறிதொரு மரியாதை இது! 
இனி உலகின் எங்கோ ஓர் இடத்தில் தமிழனுக்கு அசம்பாவிதம் நடந்தால், 
முதல் குரல் நம்முடையதாக ஒலிக்க வேண்டும்!

தமிழன் என்ற சொல்லுக்கு புத்துயிர் தருவோம்! 
பிறவேற்றுமைகளை கலைவோம்! 
ஓர் இனமாய் எழுவோம்!
தமிழினமாய்! தமிழனாய்! 
தமிழாய்!

வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்!

#மே18 இனப்படுகொலைநாள்

# May18 Tamil Genocide Day

-செல்வா


Thursday, 17 May 2018

வெற்றியின் வாசற்படி!

தோல்வி எனக்கு கிட்டிய முதல் பரிசு!
என்னை அள்ளியனைத்த முதல் வெற்றி!
பிறரும் என்மீது அக்கறை கொண்டார் என்றுணர்த்திய தருணம்!
வாழ்வில் நாம் நகர்கின்றோம் என்பதை உணர்த்தும் கருவி!
மனிதன் லட்சியப்பாதையில் கால் ஊன்றி நடக்க உதவும் லாடம்!

செழித்து வளர வித்திட்ட தழை உரம்!
உழைப்பிற்கு கிடைத்த உண்ணத உத்திரவாதம்!
திறம் மேம்பட பயன்படும்  ஊற்றுநீர்!
நீண்டு வளர்வதற்காக ஒடிக்கப்படும் கிளைகள்!

தடுக்கி விழுந்தவர் எல்லாம் தோற்றவரில்லை! 
தம்முயற்சியில்லாதவரே தோற்றார்!
தடைகள் பலவரினும் அதை தகர்ப்பவர்,
இதிகாசத்தில் அழியா இடம் பெறுகிறார்!
முயற்சி செய் முடியாதது ஏதுமில்லை!
 
விழி.எழு.விருட்சமாகுக!!!

-செல்வா

Sunday, 13 May 2018

ம்மா தமிழின் ஆகச்சிறந்த வார்த்தை!

கருவிற்கு உன் உயிர்கொடுத்து ஈன்றெடுத்தாய்!
சேட்டைகள் பல புரினும் எனை அள்ளி அனைத்து தேற்றினாய்!
தாய் மொழியாம் தமிழை தீத்திப்பாய் ஊட்டினாய்!
அல்லல் பலவரினும் அதை சமாளித்து காத்தாய்!

சமைத்து பிறர் உண்ண நீ கண்டு அகமகிழ்ந்து பின் உண்டாய்!
எங்களுக்கு குறைவில்லாமல் பார்த்து அதில் ஆனந்தமுற்றாய்!
யாரிடத்திலும் ஒருபோதும்  எனை விட்டுக்கொடுக்காமல்,
என்மீது பூரண நம்பிக்கை கொண்டவளே!

எத்தனை இடர் வந்தாலும் உன் அன்பின் சுடர் ஒருபோதும் மங்கவில்லை!
நீ கண்ட கனாவும், கடவுளிடம் கொண்ட வினாவும் எமது உயர்வுக்கே!
நானும் உன்னை பெருமிதம் கொள்ள வைப்பேன் தாயே,
அதுவே எனது இலட்சியம், ஓர் சான்றோனாக உருபெற்று  உன்னை மகிழ்விப்பது!

வாழ்க! நீர் வாழ்க!


இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!!!

-செல்வா

Saturday, 12 May 2018

வெள்ளை உடையணிந்த கமலம் நீ!
நல்ல உள்ளம் கொண்ட பவளம் நீ!
சேவை எண்ணம் கொண்ட ஔவை நீ!
இறைவன் அளித்த இரண்டாம் தாய் நீ!
காலம்பாராமல் உழைக்கும் கடிகாரம் நீ!

அவசரகாலத்திலும் தன்னலம் பாரமல் பணியாற்றும் போராளி நீ!
என்னை ஈன்று எடுக்க உதவியவள் நீ!
வயது, பாலினம் பாரா பண்பு கொண்டாய் நீ!
உடைந்தவர்களின் வாழ்வை சரிபடுத்துபவர் நீ!
பல மனநிலை கொண்டோரை அரவணைத்து தேற்றினாய் நீ!

உன்னை போற்றிட ஒரு நல்தினம் இது!
பல தலைமுறை காத்த நீர் வாழ்க! 

நின் சேவை தழைத்து வளர்க!

இன்நாடும் இம்மக்களும் உன் சேவையை என்றும் மறவார்!!!

வாழ்க! வாழ்க!!!


-செல்வா


Thursday, 10 May 2018

பெண் சுதந்திரம்!!!

சுதந்திரம் மிக உணர்ச்சிபூர்வமான வார்த்தை!
மனித பிறவிகொண்ட நாம் அடக்குமுறை இன்றி வாழ்வதது!
பிறனில் அடிபணியாமல் தன்னொழுக்கத்துடன் வாழ்வதது!

ஆண் பெண்னையும், மேல்சாதியான் கீழவனையும் கட்டுபடுத்தவே கதை
திரித்தான்!
அடக்கி ஆள பலபல சாங்கியத்தையும்,சம்பரதாயத்தையும் படைத்தான்!

சுதந்திர அறிவு பெற்றால் பெண்டிர் ஆண்துணை தேடார்!
கருத்து,கல்வி,பொருள் என தன்காலில் தானே நிற்பார்!
அதனாலே அடக்கியாள பல வியூகம் அமைத்தான்!
அதை சமுதாயத்துடனும், சமயத்துடனும் முடிச்சிட்டான்!
மீறுவோர் குற்றவாளி என இரும்புக்கரம் கொண்டு அடக்கிட்டான்!

ஆனால் அந்நிலை இன்றில்லை,
ஈ.வே.ரா போன்ற இன்னபிற தக்கோரால் தொலைந்திட்டது அந்நிலை!
பெண்டிர் பலபல அரிய செயல் புரிந்து மேல் எழுந்த நிலை!
அனைத்து செயல்களையும் பாகுபாடின்றி செய்யும் காலநிலை!

இனியாவது கட்டுப்படுத்தாமல்,
கைபிடித்து சமமாக நடப்போம்!
தூரம் சிறிதே துணை இருக்க...

-செல்வா

Friday, 4 May 2018

துயில் கலைத்திடு தமிழா!!!

எவன் தலையில் மொட்டை அடிச்சா எனக்கென்ன?
இதுதான் ஆள்பவரின்  நிலைப்பாடு இன்று!

தன்னலம் கருதி அடகு வைத்திட்டனர் தமிழ்நாட்டை!
ஆளுமை மடிந்ததால், காற்றிற்கு மடியும் புல்லாகிவிட்டனர்!

காலி இடமிருக்க காண்பவருக்கெல்லாம் ஆசையாம்!
கேலி செய்யும் நடிகர்களுக்கு குடியாள ஆசையாம்!
வேடமணிந்து வந்திங்கே வெறும் படம் காட்டுகிறார்கள்!
மோசம்போகா கூட்டத்தை குழப்பிவிட பார்க்கிறார்கள்!

சாதி, மத போர்வையில் குற்றம் புரிவோர் பலர் இங்கு!
அவருக்கு துணைபுரிவோர் அதிகாரத்தில் பலர் இங்கு!

இந்திரியம் கொண்டுள்ளோம், அறிவிற்கு பஞ்சமில்லை சற்று ஆராய்ச்சி தேவையடா!
உற்று நோக்கு பல வேசங்கள் கலைந்து உண்மைகள் புலப்படும்.
காண்பவை கானல் நீரா, இல்லை கடலா என தென்படும்.

விழி.எழு.வீரியமாகுக.

-செல்வா

போட்டி உன்னுடனே!!!

வாழ்வில் யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், 
அதற்கு பதிலாக அவர்களின் குறைகளை களைய முற்படுங்கள்!!!
சில நேரம் தவறுகள் சுட்டிக்காட்ட இடம் கொடுக்கலாம்,
ஆனால் இங்கு யாரும் பூரண சரியானவரில்லை!!! 
காலம் கனியும் காத்திருப்போம் நாமாக!!!

வாழ்க்கையும் இப்படித்தான்.
ஓவ்வொருவரும் தான் சிறந்தவன், தேர்ந்தவன்,
சுத்தமானவன் என்பதை நிரூபிக்காமல்.
மற்றவரை அடையாளமிட்டு அவர்களை விட சிறந்தவன்,
என நிருபம் செய்கிறார்கள்!!!!

மொத்தத்தில் தன்னிகரற்ற தனித்தன்மையை யாரும் நிரூபிக்கவில்லை!

அவ்வாறு  ஒவ்வொருவரும் நிரூபிக்க புறப்பட்டால் அனைவரும் சாதித்தவர்களே!!!

தன்னை தன்முயற்சியால் முந்துகிறவனும்,
அதை நிரூபிப்பவனுமே தன்னிகர் அற்றவன்!!!

நீயும் ஆயத்தாமாகு, நானும் ஆகிறேன்!
ஆனால் போட்டி உனக்கு நீயும், எனக்கு நானுமே!!!

வாழ்த்துக்கள் 👬

-செல்வா...

Thursday, 3 May 2018

இந்த நொடியில் வாழ்வோம்!!!

வாழ்வும் அப்படித்தான்,
இந்த மனித மனமும் அப்படித்தான்!!!

இருப்பதை விட்டுவிட்டு இல்லாததை எண்ணி நினைத்துருகும்!
நினைத்தது கிடைத்தால் அதன் நிலையாமையை கண்டு கவலை கொள்ளும்!!!

கடந்தவை கசப்பு எனில் அவை நல்அனுபவமாகும்,
அல்லாமல் இனிப்பு எனில் அவை நல்நினைவுகளாகும்!

கடந்தவை நம்மை ஒருபோதும் கட்டுப்படுத்தா!
அஃதே வருபவை நம்மை ஒருபோதும் பயமுறுத்தா!
அவ்விதமே ஏதிர்கொள்ள மனதை பயிற்றுவிப்பாயாக!!!

இருக்கும் ஒவ்வொரு  நொடியையும் முழுமையாக உணர்க!!!

இந்த நொடி வாழ விளைவோம்!!!

விழி.எழு.விருட்சமாகுக!!!

-செல்வா


Wednesday, 2 May 2018

பயணங்கள் வாழ்வின் புத்துயிர்புக்கள்!
எதிர்கால நினைவிற்கான உண்ணத வைப்புத்தொகைகள்!
முகம் தெரியாத மனிதர்களின் வியப்பூட்டும் சந்தை!
சகிப்பு தன்மையை பயிற்றுவிக்கும் சரியான ஆசான்!

நாம் முன்வர வண்டி தாமதமாகவும்,
வண்டி முன்வர நாம் தாமதமாகவும்,
இரண்டும் சரிவர சாலை நெரிசல் ஆகவும் துவங்கிடும் பயணம்!

சன்னல் ஓரத்து இடம் அதீத சுகம்!
அதில் காணும் காட்சிகள் சாலை ஓர வாழ்வின் எதார்த்தங்கள்!!!

எண்ண ஓட்டத்திலும் எதிர்பார்பிலுமே பயணங்கள் அமைகிறது!!!
ஓடும் பாதையில் ஒன்றை முந்த இன்னொன்று என,
பலபல தடைகளை கடந்து சென்றடைவதே பயணம்!
அதுவே வாழ்விற்கான சிறந்த எடுத்துக்காட்டுகள்!

பயணங்கள் சில நேரங்களில் பாடமாகவும்,
பல நேரங்களில் காட்சிப் படமாகவும் அமைகிறது!

எது எப்படி ஆகினும் பலவை நம்கையில் அல்ல என்பதை,
ஒவ்வொரு பயணமும் நினைவுபடுத்துகிறது!!!
பயணப்படுவோம் பதற்றப்படாமல்...

விழி.எழு.விருட்சமாகுக!!!

-செல்வா