செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 24 November 2018

தொலையாத வார்த்தைகள்!

வார்த்தைகள் தொலைவதில்லை,
மெல்ல காற்றில் கலந்துவிடுகின்றன,
காற்றின் வழி காதினுள் புகுந்து,
ரீங்காரமிட்டு மனதில் பதிகின்றன!

அக்கறை கொண்ட வார்த்தைகள் ஆளாக்குகிறது!
ஆளுமை கொண்ட வார்த்தைகள் வார்த்தெடுக்கிறது!

பாசமிகு வார்த்தைகள் அன்பை காட்டுகிறது!
பக்குவமான வார்த்தைகள் இதம் தருகிறது!

இனிமையான வார்த்தைகள் கனிவாய் இனிக்கிறது!
காதல் வார்த்தைகள் வாழ்வை பெருக்குகிறது!

தொலையாத வார்த்தைகளால் இவை சாத்தியம்!
நல்லவை நாவின் கண் உதிர்ப்போம்!

தொலையாத வார்த்தைகளால் பலர் வாழ்வை சிறப்பிப்போம்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா

Wednesday, 21 November 2018

இலவசம்!

இலவசம் என்ற ஓர் தொலையாத வார்த்தை!
அரசியல் வாதியின் ஆசை வார்த்தை!
ஒவ்வொரு தேர்தலிலும் புழங்கும் வார்த்தை!
வித விதமான வண்ணம் பூசி வலம் வரும் வார்த்தை!

வளமான வாழ்வு பெற, பசி தீர, பட்டினி தீர
என மீண்டும், மீண்டும் ஒலிக்கும்!
கேட்பவர் மனமோ லயித்துக் குளிரும்!
அன்று தொட்டு இன்றுவரை மாறாமல் ஒலிக்கிறது!

இங்கு எதுவும் இலவசமில்லை,
ஒன்றிற்கு இரண்டாய் வரிகட்ட,
எல்லாம் ஏழை மக்கள் பணமே,
அரசிடம் சென்று திரும்பிவருகிறது!

இலவசம் தவிர்த்து அரசின் கடமை அதீதம்!

படிக்க நல்ல கல்வியகம்,
தரமான மருத்துவமனை,
ஆரோக்கியமான குடிநீர்,
நீர் சேர்க்கும் அணைகள்,
எளிய போக்குவரத்து,
இயற்கை பேணல்,
தவ வேளாண்மை,
உறு பாதுகாப்பு
இது போதும்
மக்களுக்கு
இன்னபிற
அவர்தம்
முயற்சி
தரும்!

கல்வி தரும் நல்வாழ்வு,
வேற்றில் இல்லையே,
மாறுவோம் மாற்றம்
நம்மிடமிருந்தே
தொடங்கட்டும்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா






Saturday, 17 November 2018

நாம் இலையாக இருந்தால்...

சந்தோசமாய்... சுதந்திரமாய்...
தென்றலோடு பேசி!
தேனீக்களுடன் குசு குசுத்து!
சூரியனுக்கு வணக்கம் செய்து!
பறவையின் எச்சம் சுமத்து!
அசுத்தக் காற்றை உட்கொண்டு!
பின்பு சுத்தமாக்கி வெளிவிட்டு!
ஒளிச்சேர்க்கை செய்து!
பச்சை பச்சையாய் தளிர்தது,
மேன் மேலும் வளர்ந்து!
ஓர் உரமாய், சருகாய்,
மருந்தாய், தோரணமாய்...
பயணித்திருக்கலாம்...

இலைபோல் தளிர்க்க வேண்டும்!
சுடும் சூரியனிடம் உள்வாங்கி!
அதை கொண்டு உணவாக்கி!
மரம் தளைத்து நிற்க ஊட்மாகி!
என்றும் பசுமயாய் காட்சித்து!
தென்றலுக்கு சத்தம் தந்து!
வீசும் காற்றிற்கு மணமூட்டி!
பனிக்கு படுக்க இடம் தந்து!

ஏதும் அறியாதவை போல் அமைதியாய்,
பசுமையாய் காட்சியளிக்கிறாய்!
உன் போன்ற வாழ்வு எனக்கும் கிட்ட என் செய்வேன் தாயே!
இயற்கையே!!

-செல்வா

Wednesday, 14 November 2018

கடவுளின் எழுத்துப்பிழைகள்!

படைக்கும் பெரியோனே,
பார்போற்றும் வல்லானே!

உன்னை நான் போற்ற பலகாரணமுண்டு,
அதை நீயே அறிவாய் பரம் பொருளே!

பிழைகள் பிழைத்திருப்பவர்களுக்கில்லை பரமனும் எழுத்துப்பிழை புரிவானா என எண்ணி வியக்கிறேன்!

இத்தனை அழகான உலகில்,
எத்தனை அழகு பார்த்து ரசிப்பதற்கு,
ஏனோ பலருக்கு பார்வையில்லை!

இத்தனை இசையான உலகில்,
எத்தனை ஓசைகள் கேட்டு மகிழ்வதற்கு,
ஏனோ பலருக்கு கேட்கும் திறனில்லை!

இத்தனை பரந்த உலகில்,
எத்தனை பாதைகள் நடப்பதற்கு,
ஏனோ பலருக்கு கால்களில்லை!

இத்தனை மொழி கொண்ட இவ்வுலகில்,
எத்தனை சொல்லின்பம் பேசுவதற்கு,
ஏனோ பலருக்கு பேச குரலில்லை!

இதை காணும் பொழுது ஓர் கனம் நான் நலமாய் இருப்பதற்கு நனி நன்றி மொழிகிறேன்!
மறுகனம் படைத்தவனின் எழுத்துப்பிழையை எண்ணி வியக்கிறேன்.

இதை பிழை என்று உரைப்பதில் ஐயமில்லை இறையே!
அனுதினமும் மாற்றுத்திறனோர் படும் வலி கொடியதே!
அவ்வலி கண்டும் இப்பிழை சுட்டாதிருப்பதே தவறு!

-செல்வா

Sunday, 11 November 2018

பறவை!

பறவையே உன் கூட்டில் தங்க ஓர் இடம் தா,
ஓர்நாளாவது விரைந்து தூங்கி எழுவேன்!

பறவையே உன் சிறகை ஓர் நாள் கடன் தா!
பரந்த வானில் சுதந்திர காற்றை ஓர்நாள் சுவாசிப்பேன்!

பறவையே உன் தனித்தன்மையை ஓர் கனம் கற்றுத்தா!
தோல்வி கண்டு துவண்டுவிடாமல் ஒவ்வொரு நாளும் உழைப்பேன்!

பறவையே உன் குரலை ஓர்நாள் கடன் தா!
சண்டையிட்ட காதலியை பாடிக் கவிழ்ப்பேன்!

பறவையே உன் சினேகப்பார்வையை சில நேரம் தா!
பேசப் பயப்படும் மனிதர்களிடம் நம்பிக்கையான நட்பை வளர்ப்பேன்!

உன் போல் இருந்தால் மனிதனுக்கு ஏது துன்பம்?
படைத்த நோக்கத்திற்காக வாழ்ந்தால் அதுவே மனிதற்கு இன்பம்...

-செல்வா


Friday, 9 November 2018

ஆசை!

மேகத்தை அள்ளி தெளித்து கோலமிட ஆசை!
வண்ணத்துப் பூச்சியின் சிறகில் பறந்திட ஆசை!

பூத்திருக்கும் பூவிடம் மயங்கி கிடக்க ஆசை!
காத்திருக்கும் நண்டிடம் மழையாய் பொழிய ஆசை!

வானவில் வண்ணத்தை கடன் வாங்க ஆசை!
அதை வாழ்வில் பூசி சிரித்து மகிழ ஆசை!

காந்தம் வாங்கி நல்ல நேரத்தை கவர ஆசை!
உலக பூசையனைத்தும் எனக்கே பலிக்க ஆசை!

வாழ்வு ஒன்று அதை சிறப்பாய் வாழ ஆசை!
இப்படி வாழ்ந்திட எவரும் விரும்பும் படி வாழ ஆசை!

ஆசைகள் அத்தனையும் கைகூட ஆசை!
ஆசைகள் நிறைவேற்றி ஆசைக்கே ஆசானாக வாழ ஆசை!

-செல்வா


Wednesday, 7 November 2018

அனுபவம்!

தடம் பதித்து நடக்க வந்தாய்!
தடுக்கி விழுந்தும் எழுந்தாய்!
படுத்து கிடக்க வரவில்லை,
ஏதேனும் சாதிக்க வந்தாய்!
சோம்பித்திரிய மனதுடன்,
ஏதேனும் கட்டி எழுப்ப வந்தாய்!

எத்தனை தடை தாண்டி புவி சுழல்கிறது?
எத்தனை மடை தாண்டி நீர் ஓடுகிறது?

மனம் கொண்ட மனிதனுக்கோ தடை ஏதுமில்லை!
வழித்தடம் இல்லை எனில் புதிய பாதை பிறக்கும்!

சென்றதை விட்டு விடு!
இயன்றதை தொடர்ந்திரு!
முன்னேறி சென்று கொண்டிரு!
நாளும் வளர்ந்து கொண்டே இரு!

இங்கு தேங்கி நிற்க நேரமில்லை,
புறம் பேசித் திரிந்து புண்ணியமில்லை,
கனவு நினைவாக களத்திலே வேலை செய்!
கனவை நினைவாக்கிய சிலரில் ஒருவனாய் இரு!

விழி.எழு.விழுமியமாகுக!

-செல்வா


Sunday, 4 November 2018

மேகம்!

நீர் பிடித்து நிற்கும் மேகமே நில்!
கொஞ்சம் மழையாக வந்திங்கு செல்!

நிலவின் தோழனே நீர் குடித்த மேகமே,
சற்றும் சளைக்காமல் இங்கும் அங்கும் சுற்றித்திரிகிறாய்,
மேலும் கீழுமில்லாமல் இடையில் தொங்குகிறாய்!

நான் எங்கு சென்றாலும் என்னையே பின் தொடருகிறாய்!
இன்றெல்லாம் கடலுக்கு வண்ணமடிக்கும் வேலை இல்லையா உனக்கு?

இரவெல்லாம் நட்சத்திரங்களுடன் கும்மாளம் போடுகிறாய்!
மலையை கண்ட உடனே அருகில்  வந்து நலம் விசாரிக்கிறாய்!

மிதக்கும் மேகமே உன்னை போன்று மிதக்க, இங்க பலருக்கு ஆசையே!
மிதக்கும் போதை அறிந்து, பழக்கம் விடாதோரின் ஓசையே அதிகம்!

உன்னைப்போன்று கர்வமில்லாமல் இருக்க மனிதன் கற்றால் போதும்!
ஊரில் உதவி பெருகும், ஏழ்மை குறையும்!
பண்பு சிறக்கும், அன்பு தழைக்கும்!

நாளும் உன் போல் மிதக்க நினைக்கும் யாசகனை நினைவில் கொள்வாய்!

-செல்வா






Friday, 2 November 2018

சாதி என்னும் சதி!

காதல் கூட இன்று சாதி பார்த்துத்தான் ஒன்று சேரும்,
இல்லையேல் இடையில் இருமினாற் போல் அந்து போகும்!

வள்ளுவன் வாழ்ந்து ஈராயிரம் ஆண்டு கழிந்த பின்னும்,
கழியாமல் வீசுதிந்த சாதி நாற்றம் இன்னும்!

வேர்விட்டு வளர்ந்திட்ட சாதி இன்று விழுதோடு நிற்குது!
பெரும் காற்றிலும், புயலிலும் அது விழாம தப்புது!

எங்கு ஓடி ஒளிந்தாலும் விடாமல் துரத்துது,
பிறப்பிலே வந்தது சவக்குழி வர தொடருது!

படிப்பு கொடுத்தா முன்னேறி மறந்திடுவான்னு, சோறு போட்டு படிக்க வச்சா.
இன்னைக்கு படிச்சுப்புட்டு தனித்தனியா ஆளுக்கொரு சாதிச்சங்கம் வச்சான்.

இருந்த தலைவரை எல்லாம் சாதி வாரியா பிரிச்சிட்டான்,
அவர் பேரு புகழ சுருக்கிட்டான்.

பிரிந்து நின்றே இனத்தை காவு கொடுத்திட்டான்!
தமிழினம் என்ற பெருமை மறந்து,
சாதி என்னும் சிறுமையிலே தங்கிட்டான்!

இனி என்ன இருக்கு இவனிடம் மிச்சம்!
பல சாதிக்கொடி தான் பறக்குது உச்சம்!
இது தமிழினத்திற்கான அச்சம்!
விழித்திட்டால் ஏற்படும் மாற்றம்!

விழி.எழு.ஒன்றுபடு!

-செல்வா