செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 30 July 2018

முதல் தனிமை!

எனது முதல் தனிமை காதலினால் அல்ல!
எனது முதல் தனிமை வாலிபத்தால் நேர்ந்தது!

பிறந்தது முதல் பார்த்து பார்த்து வளர்க்கப்பட்ட பாலகன்!
கையில் சாப்பிட சிரமப்பட்டு ஊட்டிவிட்டு வளர்ந்தான் பாலகன்!
நாட்கள் ஓடின அதனுடனே படித்தான், வளர்ந்தான்!
பருவம் கொண்டான், கல்லூரியும் முடித்தான்!
வேலை கிடைப்பதோ பட்டிணத்தில் தான், நோக்கினான்!

வாழ்க்கை என்னும் வட்டத்தில் பொருள் தேடி புறப்பட்டான்!
உறவும், தோளும் ஊரிலே வழியனுப்பி நின்றது!
கடனும் கனவும் விடாமல் துரத்தின!
அயலூர் வீதிகளில் அல்லும் பகலுமாய் திரிந்து!
ஐந்தையும் பத்தையும் பார்த்து பார்த்து செலவு செய்து!
எஞ்சியதில் மிஞ்சினால் மாதக்கடைசியில் உணவு உண்டு!
கண்டு கண்டு பயணித்து கன்றுபோல் நடந்து!
வேலை என்னும் சிகரம் நோக்கி குன்றேறினான்!

முதல் முறை கூட்டை விட்டு பறக்கும் பறவைக்கு கூட துணையுண்டு!
ஆனால் வேலை தேடி பட்டிணம் போகும் பிள்ளைக்கு யார் துணை!
காலம் தான் துணை!

பெற்றோர்களே பிள்ளைகளை உங்கள் கண்முன் சிறகடிக்க பழக்கிவிடுங்கள்!
ஒரு முறை விழுந்து பின்பு எழுவதை கற்றுக்கொடுங்கள்!

பருவத்திலும் கைப்பிடித்து நடக்காமல்!
கையில் உணவு ஊட்டாமல்!
தூர நின்று நடக்க கற்றுக்கொடுங்கள்!
தட்டில் எடுத்து போட்டு உண்ணச்சொல்லுங்கள்!
அம்பாரியில் இருந்து இறக்கிவிட்டு!
நடந்து போக கற்றுக்கொடுங்கள்!
அவன் விழுவான் சற்று பொறுங்கள் எழுவான்!

தனிமையே அவனை தனிமனிதனாக தேற்றும்!

-செல்வா

Saturday, 28 July 2018

மழைஇரவு!

அந்திமழை அரங்கேறியது!
அவைநிறைந்த சத்தத்திற்கினையானது!

தொங்கும் இலைகளையும், தங்கும் பறவைகளையும் விழிக்கச்செய்து!
அவைகளின் காதுகளில் கிசுகிசுத்து உடல் நனைத்து உஷ்ணம் தணித்தது!

காதல் கொண்டவர்கள் காதலியை தேட!
உடல் நடுங்கியவர்கள் தேனீர் தேட!
நண்டுகள் சேற்றில் விளையாட!
ஒளிரும் சந்திரனுக்கு மகுடம் போல்,
மிளிர்ந்தது மழை இரவில்!

ஓடும் நீரில் ஓடமிட மனதடிக்குது!
முற்றிலும் நனைய உள்ளம்துடிக்குது!
கையில் உள்ள கைப்பேசி தடுக்குது!
மனம் மீண்டும் மீண்டும் துடிக்குது!
கடக்க முடியா இரவாய் கடக்குது!

மழையின் சத்தத்தில் மற்றவை அடங்கின!
மழையின் குணத்தில் மற்றவை குளிர்ந்தன!

மழை இரவு ஓர் சிறுகுழந்தைபோல்!
சிணுங்கி சிணுங்கி இரவு முழுவதும் ஒலிக்கும்!
ரசிக்காதவரையும் வசியம் செய்யும் தன்மை அதற்குண்டு!

உண்பவர்களுக்கு மழையில் சூடான உணவு!
காதலிப்பவர்களுக்கு மழையில் மூழ்கும் உணர்வு!
குழந்தைகளுக்கு மழையில் விளையாடும் உணர்வு!
விவசாயிக்கு மழையில் பயிர் செழிக்கும் உணர்வு!
உறைந்து கிடக்கும் உணர்வுகள் கிளர்ந்து எழும் இரவு!
இருள் சூடிய இதமான மழை இரவு!

-செல்வா

Wednesday, 25 July 2018

பணம்!

பணம் அளவில்லாமல் இருப்பினும் அழிவே!
பணம் அளவுகுறைவாக இருப்பினும் கழிவே!

அருள் நிறைந்தவன் அளவாக செல்வம் பெற்றவனே!
அளவுடையதாக இருப்பின் ஆடம்பரம் வாரா!
அளவுடையதாக இருப்பின்
தலைக்கனம் வாரா!
தலைக்குமேல் கனம் வர படுகுழியே!

சற்று குறைவாக இருப்பின் நல்குரவு!
வறுமை கடனில் சென்றுவிடுதல் கேடு!

நிறைவும்மில்லாமல் குறைவும்மில்லாமல்
அருள் வேண்டும்!
ஏவர்க்கும் தீங்கில்லா பொருள் வேண்டும்!
எக்காலமும் தடையில்லா அண்ணம் வேண்டும்!
ஒருபோதும் கடனில்லா வாழ்வு என்றும் வேண்டும்!
என்றென்றும் நிம்மதியான தூக்கம் நித்தம் வேண்டும்!
காலத்தால் குறையாத மகிழ்ச்சி வேண்டும்!
அருளும் பொருளும் அறவழியில் பெற்றிடும் வரம் வேண்டும்!

இவை கிட்டினால்! இவ்வுலகில் அவனே ஒப்பற்றவன்!

-செல்வா

அருள் நிறைந்தவன் அளவாக செல்வம் பெற்றவனே!
அளவுடையதாக இருப்பின் ஆடம்பரம் வாரா!
அளவுடையதாக இருப்பின்
தலைக்கனம் வாரா!
தலைக்குமேல் கனம் வர படுகுழியே!

சற்று குறைவாக இருப்பின் நல்குரவு!
வறுமை கடனில் சென்றுவிடுதல் கேடு!

நிறைவும்மில்லாமல் குறைவும்மில்லாமல்
அருள் வேண்டும்!
ஏவர்க்கும் தீங்கில்லா பொருள் வேண்டும்!
எக்காலமும் தடையில்லா அண்ணம் வேண்டும்!
ஒருபோதும் கடனில்லா வாழ்வு என்றும் வேண்டும்!
என்றென்றும் நிம்மதியான தூக்கம் நித்தம் வேண்டும்!
காலத்தால் குறையாத மகிழ்ச்சி வேண்டும்!
அருளும் பொருளும் அறவழியில் பெற்றிடும் வரம் வேண்டும்!

இவை கிட்டினால்!
இவ்வுலகில் அவனே ஒப்பற்றவன்!

-செல்வா

Friday, 20 July 2018

குற்றாலம் அருவி!

மேகத்தில் முகந்து
காராய் பொழிந்து,
மலையெங்கும் வழிந்து,
தவழ்ந்தோடி பாய்ந்து,
அருவியாய் பொழிந்தாய்!

எத்தனை இடர்கடந்து ஓடினாலும்!
மாறவில்லை வேகம்,
காணவில்லை சோகம்,
தாளவில்லை உற்சாகம்!

வெள்ளி ஆடையுடுத்தி,
காலில் சலங்கை கட்டி ,
புகை நிரம்ப சாரல் பெய்து,
சில்லென மேனி கொண்டு,
தாய் போல் குளிர்விக்கிறாய்,
சேய் போல் மகிழ்விக்கிறாய்!
வேகமாய் ஓங்கி  அடிக்கிறாய்!
பொங்கி பாய்ந்து விடுகிறாய்!

சற்றும் சளைக்காமல்
எங்களை பார்க்க வருபவளே உனக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம்?
என்று எண்ணி எண்ணி வியப்பில் ஆழ்ந்ததடி மனம்!

கொடையான உன்னை காக்க நெகிழி தனை தவிர்ப்போம்!
நீண்ட இயற்கை தனை பேனிப்பாதுகாப்போம்!
காடு, வீடு இரண்டும் ஒன்றாய் பாவித்து அசுத்தம் செய்யோம்!
அமிர்தமாய் நீர் அதனை சேமித்து பயிர் செய்வோம்!
நீரின் மகிமைதனை சிசுவுக்கும் எடுத்துரைப்போம்!
உறுதி பூணுவோம்! இயற்கையை போற்றுவோம்!

வா! வா! வகையானவளே ஓடி வா!

-செல்வா

Wednesday, 18 July 2018

காதல் சிறைக்கைதி!

என்னை திருடும் விழி அழகே!
உன்னருகே உலகம் மறக்குதடி!

தடா சட்டம் இல்லை, குண்டர் சட்டமாய் என்மீது பாய்ந்து சிறை செய்!
உன் மேற்பார்வையில் கைதுசெய்து, வழக்காடி சிறை செய்!

துப்பாக்கி தோட்டாவைப் போல் உன் பார்வை நெஞ்சை துளைக்கு தடி!
மெல்லிய தேகமிது அதை தாக்கி தூள் தூள் ஆக்காதடி!

வார்தைகளை உதிர்த்துவிடு உன் செவ்விதழால்!
மதுரம் சொட்டாதோ! இல்லை பன்னீர் மனக்காதோ!
அதுவுமில்லை எனில் உன் பற்களின் ஒளியால் முத்துக்கள் ஜொலிக்காதோ!
வாய் திறக்காமல் கண்களினால் வார்த்தைகளை கடத்திடு!

உன் பார்வையால் நீராய் இருந்த நான்  கொதித்தெழுந்து ஆவியாகினேன்!
பின்பு அந்த கடைக்கண் பார்வையில் குளிர்ந்து,
சில்லேன்று உன் கையிடையில் அகப்பட்டேன், அகம் குளிர்ந்தேன்!

மயிலே தூரம் நின்றது போதும்!
கூர் பார்வையால் குத்தியது போதும்!
கோலம் செய்! வண்ணக்கோலம் செய்!

உன் விழி நேத்திரத்தில்  சிக்கித்தவிக்கும் சிறை கைதி!!! 

-செல்வா

Monday, 16 July 2018

நல்லகாலம்!

இனி நல்லகாலம்...
இனிப்பான காலம்...
இளமையான காலம்...
களிப்பான காலம்...
நமக்கான காலம்...

உழைப்பவர்க்கான காலம்...
உன்னதமான காலம்...
உற்சாகமான காலம்...
உலகம் போற்றும் காலம்...
ஊக்கமான காலம்...

நமது எண்ணம்போல் வாழ்வு செழிக்கும் காலம்...
கனவுகள் நிறைவேறி வண்ணம் கொழிக்கும் காலம்!
வாழ்வில் தென்றல் சுழன்றடிக்கும் காலம்!
தனங்கள் பூத்துக்குலுங்கும் முன்பனிக்காலம்!

காலம் நமது எண்ணங்கள் போலே ஒளிரும்!
எண்ணங்களை செதுக்குவோம் ஒளிமயமாக்குவோம் எதிர்காலத்தை!!!

வாழ்க வளமுடன்

-செல்வா
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை,
ஒவ்வொரு மாற்றமும் தீர்க்கமாக சொல்லுகின்றன!

குழந்தையில் மழலை மொழியாய் மாறின!
பள்ளி சென்றதில் கிறுக்கல்கள் எழுத்தாய் மாறின!
ஓடித்திரிந்ததில் நாட்கள் வேகமாய் மாறின!
சற்று வளர்ந்ததில் எல்லாமும் கண்ணெதிரே மாறின!

வளர்ச்சியடைந்தேன் தேகம் மாறின!
பருவமடைந்தேன் தோற்றம் மாறின!
படித்து பகுத்தேன் அறியாதவை மாறின!
காதல் கொண்டேன் பார்வை மாறின!
பணியில் அமர்ந்தேன்  வருமானம் மாறின!
உறவுகள் கண்டேன் பொறுப்புகள் மாறின!

காலம் மாற, மாற! ஆண்டுகள் ஏற ஏற!
எல்லாமே மாறிக்கொண்டே செல்கின்றன!

மாற்றம் தொடர்வதால் பூமியும் இடைவிடாமல் சுழல்கிறது போலும்!
இரவு,பகலாய் பருவ காலங்களாய் மாறி மாறி துரத்துகிறது!
ஓட்டம் நின்றபாடில்லை!

பூமிக்கே இந்த நிலை எனில்,
நமக்கு என்ன விதி விலக்கா?

மாற்றத்தில் பங்கு கொள்வோம்!
மாற்றம் நல்லன விளைவிக்கும்!
நம்புவோம்! நம்நிலை உயர மாற்றம் வழிபயக்கும்!

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் இன்றும் என்றும் !

-செல்வா











Saturday, 14 July 2018

குடிமகன்!

குடிமகன் என்பதை தவறாக புரிந்து கொண்டு,
குடித்துவிட்டு திரிகிறார்கள் பல மகன்கள்!

குப்பை தொட்டிக்கு பூட்டு போட வேண்டும்,
இல்லையெனில் குப்பை இருக்கும் தொட்டி இருக்காது!

பொது சொத்து என்றால்,உரிமையுடன் உறங்கிவிடுகிறான்,
இல்லையெனில் திருடிவிடுகிறான்!

பார்க்க அழகு என்றால்,ஒன்று அபகரிக்கிறான்,
இல்லையெனில் ஆக்கிரமித்து விடுகிறான்!

அரசியல் என்றால் சாக்கடை என்கிறான்,
காசுக்கு ஓட்டை விற்றுவிடுகிறான் இல்லையெனில்,
காணி பிரயோஜனம் இல்லை என கதைக்கிறான்!

விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்கிறான்,
மற்றவையெல்லாம் யாருக்கு வேண்டும் என்கிறான்!

நடிப்பை பார்த்து நடிகனுக்கு ரசிகன் என்கிறான்,
கடவுளுக்கு நிகர் பாவித்து, அபிஷேகம் செய்கிறான்!
இல்லை எனில் கட்சி ஆரம்பித்து தலைவனாக்கிவிடுகிறான்!

இவர்கள் எல்லாம் மீண்டும் பள்ளி சென்றால் பள்ளி தாங்குமோ?
பள்ளிகளின் அகராதிகளை மாற்றிவிடுவார்கள்!

கற்ற கல்வியாலும், பெற்ற அறிவாலும்!
முதலில் உழைப்பால் வீட்டிற்குச்செய்!
அதன்பின் மிஞ்சினால் நாட்டிற்குச் செய்!
ஏனெனில் வீடு அறவழியில் உயரின் நாடும் உயரும்!

வாழ்க தமிழ்நாடு! வாழ்க பாரதம்!

-செல்வா


Wednesday, 11 July 2018

 பள்ளிக்கூட பரிதாபங்கள்!!!

சாக்கு மூட்டை போல சுமந்து!
கட்டு கட்டாய் புத்தகப்பை சுமந்து!
குனிந்து அசைந்து அசைந்து!
செல்வது யாரோ குழந்தைகள் தானோ?


தள்ளுவண்டி வியாபாரி போல் அள்ளி குவித்து!
சிதறுபவைகளை வரிந்து இழுத்துப் பிடித்து!
தள்ளாடித் தள்ளாடி இழுத்துப் போகிறது ஆட்டோ!
செல்வது யாரோ குழந்தைகள் தானோ?

காலை முதல் மாலை வரை,
கண்டிப்பாக அதட்டிப்பேசி!
குழந்தையின் தன்மை அறியாமல்,
அதன் மீது அழுத்தி திணித்து,
படி,படி என்றபடி புகட்டுவார்!
குழந்தைக்கு எரிச்சல், அன்றே! ஆர்வம் வரா...

பள்ளி செல்ல குழந்தைக்கு ஆசை பிறக்க வேண்டும்!
பள்ளி செல்லா நாட்கள் குழந்தைக்கு பசிக்காத நாட்களாக வேண்டும்!


பள்ளியில் ஒவ்வொரு நாளும்,
புதிய புதிய விசயங்களால் ஆர்வம் பெருக வேண்டும்!
பள்ளியில் குழந்தைகள் தனித்தனியாக ஊக்குவிக்கப்பட வேண்டும்!
இத்தனைக்கும் சிறந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் வேண்டும்!

மொத்தத்தில் மெத்த படித்தவர்கள் அனுபவிக்கும் இடமாக பள்ளி அல்லாமல்!
கத்துக்குட்டிக்கு படிக்கும் ஆசை தூண்டும் இடமாக பள்ளி இருக்குமானால்,
பள்ளிகளுக்கு விடுமுறை தேவையில்லை!

தினம் தினம் ஆனந்தமே!

-செல்வா

Sunday, 8 July 2018

தனித்துவம்!

இயல்பாய் இருப்பதும் விசித்திரம்!
இயல்பாய் நடப்பதும் விசித்திரம்!
தனித்துவம் இழப்பதே, ஓடும் காலத்தின் விசித்திரம்!

நம் நல்எண்ணங்களை மழுங்கடித்து!
நம் சிறப்புகளை அபகரித்து!
நம் வளங்களை சுவிகரித்து!
நம் அடையாளம் அழிக்கப்பட்டால்,
கூட்டத்தில் ஒருவரே நாம்!

அதற்கே இவ்வுலகமும், ஆதாயக்காரர்களும் துடிக்கிறார்கள்!
தன் பலமும், தனித்துவமும் விட்டுக்கொடுக்காத மனிதன்!
ஓர்இளவரசனாக இருக்கிறான்!
இளவரசனை இரவல் காரனாக,
மாற்றத்துடிக்கிறது இவ்வுலகம்!

இனம் கண்டுகொள்,
உன் பாதையில் நீ செழித்து வளர்க!
முடிந்தவரை கரம் கொடுத்து உதவுக!

நமது தனித்துவம் அடம்பிடிப்பது என்றால்,
நினைப்பது கிடைக்கும் வரை தீரா உழைப்பு வேண்டும்!

நமது தனித்துவம் ஓவியம் வரைவதென்றால்,
மனதில் நீங்காத கற்பனை உணர்வு வேண்டும்!

தனித்துவம் பிரிந்து நிற்பதற்கில்லை,
சிறந்து விளங்குவதற்கு! 

 
நவரத்தினத்தில் ஓர் வைரம் போல்!
ஒன்பதையும் சேர்த்து பார்ப்பின் வைரமும் ரத்தினமே,
ஆனால் தனித்து பார்பின் அதன் மதிப்பும் விலையும் அதிகம்!

அதுவே! தனித்துவம்!

முயற்சி இல்லா வித்து உரமாகும்!
முயற்சியுடைய வித்தோ மரமாகும்!


மரமா? உரமா?

விழி! எழு! விருட்சமாகு!

-செல்வா



Saturday, 7 July 2018

தாடி!

இளமைக்கால
இளைஞர்களின்
பரிட்சயம்!

காதலில்
தோற்றவர்களின்
அடையாளம்!

ஆண்களின்
பலநேர
யோசனையில்
துணைநிற்கும்
துணைவன்!

கருநிற
காடாய்
அழகு
சேர்க்கும்
அம்சமாய்
திகழ்வது
தாடியே!

தாடியே!
ஆணின்
பொறுமை
மற்றும்
பேணுதலின்

உண்மை
வடிவம்!



ஆண்மையின்
அடையாளமாய்
பெண்மைக்கு
மிகப்பிடித்த
விசயமாய்
இருப்பது
தாடியே!

தாடி ஆணின்
பெருமையே!

வைத்திருப்பின்
அருமையே!


-செல்வா

Friday, 6 July 2018

விடலைப்பருவம்!!!

விடலைப்பருவம் வினோத மாற்றம் நிகழும் பருவம்!
ஆண், பெண் என்ற பாலின வேறுபாடில்லை அதற்கு!

இருவருக்கும் ஏற்படும் மாற்றம் உடலளவில்,
உள்ளத்தளவில், யூகிக்கமுடியாதது!
உறுப்புகள் எல்லாம் விளைபடும் காலம்!
உள்ளம் விடைதெரியாமல் தவிக்கும் காலம்!
இனம் புரியாத உணர்வுகளால் பரிதவிக்கும் காலம்!
பருவத்தை பற்றி பேச முடியாமல்,
பெற்றவரும், மக்களும் பேசிடா காலம்!

இது ஒவ்வொருவரும் கடக்க வேண்டிய காலமே!
காதல் மாற்றங்களும், பாலின ஈர்ப்புகளும் தலைதூக்கும் நேரம்!
பருவத்தில் தெரியாத, ரகம் புரியாத,
விசயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வங்கள் அதிசயமானவை!

பருவமோ கயிற்றின் மீது நடக்கும் காலம்,
ஆர்வத்தில் விழுந்தாலும், அறியாமல் விழுந்தாலும் படுகுழியே!


அவசரப்படாமல், ஆர்வப்படாமல் இயல்பாய் கடத்துக நாட்களை!
முடிந்தவரை நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மனம் விட்டு பேசி!
தடுமாறாமல், தடம் பதித்து, காதலினால், காமத்தினால்,
போதை பொருட்களினால் கெட்டு போய்விடாமல் தள்ளியிருங்கள்!

நாம் இருக்கும் காலமோ தொழில் நுட்பக் காலம்! 

உங்கள் மேல் வைத்த நம்பிக்கை என்றும் மிளிரட்டும் வைரம் போல்!

பருவம் பதட்டப்படாமல் கடக்க வேண்டிய சாலை!
விழிப்புடன் பயணிப்போம்! வழிகாட்டுவோம்!

-செல்வா



Wednesday, 4 July 2018

 பள்ளி!

கெஞ்சிப்பேசி!
அழுது அடம்பிடித்து!
போக நினைக்காத இடம் பள்ளி!

நாள் போன போக்கிலும்!
கால் போன போக்கிலும்!
போக நினைக்காத இடம் பள்ளி!

முட்புதர்களும், வாய்க்கால்களும்,

தந்திடாத பரிட்சயம் தான் அந்த பள்ளி!

ஆரம்ப காலங்களில் எனக்கு பள்ளி பிடித்ததை விட,
பள்ளிக்கே என்னை மிக பிடித்தது போலும்!
ஒருபோதும் என்னை விட்டு விடவில்லை!

பின்பு வயிற்றிற்காக பள்ளிபோய்,பசி நீங்கிப்போய்!
அந்நாளில் பள்ளி ஒரு வேளை சோற்றிற்காய் ஆனது!

வித்து வளர்கையில் வியந்தேன் ,பள்ளி அறிவியல் என்றது!
மிட்டாய் வாங்க காசு எண்ணினேன், பள்ளி கணிதம் என்றது!
கட்டபொம்மன் கதை கேட்டேன், பள்ளி வரலாறு என்றது!
குமரியில் வள்ளுவர் சிலை பார்த்து பிரம்மித்தேன், பள்ளி அமுது தமிழ் என்றது!

இத்தனை வியப்புகளை பள்ளி சொல்லித்தருமா?
ஆச்சரியமுற்றேன்! ஆர்வம் பிறந்தது,சரணடைந்தேன்!
ஆம் அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு மிகவும் பிடித்த இடம் பள்ளி ஆனது!

பள்ளி பல மேதைகளை உருவாக்கி!
கற்சிலை போல் அறிவில் மெருகேற்றி!
மிளிர்ந்த அறிவால் மானுட வாழ்வை எளிதாக்கி!
இன்னும் பல அரியவை நிகழ்த்த துணைபுரிவது பள்ளியே!


பள்ளி சென்ற காலம் மறக்க இயலாதது!!!

-செல்வா



Tuesday, 3 July 2018

தேடல்!!!

தேடு தேடு இடைவிடாமல் தேடு!
நீ எதைத்தேடுகிறாயோ
அதுவும் உன்னையே தேடுகிறது!


நாம் தேடியது சீக்கிரம் கிடைக்கவில்லை எனில்,
நாம் தயார் இல்லை என்று அர்த்தம்!
தேடிய பொருளை பேண வழி காணவில்லை எனில்!
அது நமது தகுதியின்னைமை ஆகிவிடும் அல்லவா!

தகுந்த நேரத்தில் நம் தகுதி பார்த்து,
நம்மிடம் வந்துவிடும்! நாம் தேடும் பொருள்!

தேடித் தொலைந்திடுவோம்!
தொலை தூரமில்லை!
தொட்டுவிடும் தூரம்தான்!

கண்ணில் பட்டுவிடு!
உன்னை இமைகளில் வைத்து காத்திடுவேன்!

-செல்வா