செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 18 November 2019

வானமே எல்லை!

மெல்ல மெல்ல ஏறுவோம் வானில்,
வட்டமிட்டு பாடுவோம் வானில்,

திட்டமிட்டு ஆடுவோம் வானில்,
வண்ணமிட்டு காட்டுவோம் வானில்,

கண்களில் கனவுகளால் கண்டதை,
எண்களில் எண்ணங்களால் எண்ணுவோம்!

பண்ணுவோம் முடிந்ததை பண்ணுவோம்!
பண்ணுவோம் முடியும் வரை பண்ணுவோம்!

வாழும் வரை வாழ்வதல்ல வாழ்க்கை,
வீழும் வரை விடாமல் வாழ்வதே வாழ்க்கை!

-செல்வா!

Saturday, 16 November 2019

தேவை!

தேவை கண்டுபிடிப்புகளின் தாய்,
மனிதஇன வளர்ச்சிக்கு அச்சாணி,

உணவுத்தேவை வேளாண்மைக்கு வித்திட்டது,
உறைவிடத்தேவை கற்காலத்திற்கு வித்திட்டது,
உடைத்தேவை தொழிற்கருவிகளுக்கு வித்திட்டது,

தேவை ஒன்று இல்லையேல்,
மனிதன் தூங்கியே கழித்திருப்பான்,
தேவை ஒன்று இல்லையேல் மனிதன் தேங்கியே கிடந்திருப்பான்!

இன்று நாம் மென்றுணரும் அத்தனையும்,
என்றோ நாம் கண்டுணர்ந்த கனவின் விழைவே!

தேவையில்லையேல் இன்று மொழியிருந்திருக்காது!
தேவையில்லையேல் இன்று எதுவும் பிறந்திருக்காது!

தேவை உள்ளவரை மதிப்புமுண்டு,
இதை உணர்ந்தார் வாழ்ந்தும்முண்டு!

-செல்வா!

Thursday, 14 November 2019

கலக்கம் தீர்ந்துபோகும்!

கலக்கம் எல்லாம் தீர்ந்துபோகும்,
கவலை எல்லாம் மாறிப்போகும்!

காலம் எனும் மருந்து உண்டு!
கடமை எனும் நெறியும் உண்டு!

உன்னோடு பயணிக்க உலகம் உண்டு,
எங்கு சென்றாலும் பின்தொடரும் நிலா உண்டு!
எங்கு சென்றாலும் உடன்வரும் விண்மீன் கூட்டம் உண்டு!

கலங்கும் பொழுது மனதிடம் விலக்கிக்கொள்,
பாதை கடினம் தான், ஆனால் பயணம் இனிதே!

கலங்கும் பொழுது மனதிடம் விலக்கிக்கொள்,
பயணம் நெடிது தான், ஆனால் முடிவு இனிதே!

வீசி வரும் மேகத்தை திருப்பி மழையாய் மாற்றும் வல்லமை மலைக்கு உண்டு,
வீசி வரும் சோதனையை திருப்பி சாதனையாய் மாற்றும் வல்லமை நமக்கும் உண்டு!

வாழ்க்கையே நம்பிக்கைதான்,
வாழ்க்கை நம்கைகளில் தான்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!

Tuesday, 12 November 2019

விடியலைத்தேடி!

உறக்கமிலா விடியலில்லை,
உறங்கியவர்கள் எதையும் தவறவிடவில்லை,
நேரத்தை தவிர எதையும் தவறவிடவில்லை!

காலை உறங்கிய நாட்களை எப்படி மீட்பது என,
இரவு முழுவதும் யோசித்தே தூங்கினேன் அவ்வாறு தூங்கி,
மற்றொரு காலையும் விடியாமல் கழித்தேன்!

இனிவரும் நாளிளாவது உறக்கம் உடலுக்கென கொள்வேன்,
விடியலை உள்ளுணர்வுக்கென கொள்வேன்!

இதுவரை கழிந்தது கடனாக போகட்டும் விட்டுவிடு!
இனிவரும் காலமாவது சேமிப்பாக இருக்கட்டும் விழித்தெழு!
ஒரு கை பார்க்கலாம்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!

Thursday, 7 November 2019

குழந்தை!

அந்தக் குழந்தை அவ்வளவு அழகானது,
மழலை குணம் அவ்வளவு மகிழ்வானது,

பேச்சு புரிய வேண்டியதில்லை,
குரல் சத்தமுற வர வேண்டியதில்லை,
மழலையின் குணமே மகிழ்வுதான்!

கைகளில் பேசி,
காதுகளில் சிணுங்கி,
வாயினால் முத்தமிட்டு,
முதுகில் அம்பாரி செய்வது,
யாருமிலை மழலையே மகிழ் நன்மழலையே!

-செல்வா!

Wednesday, 6 November 2019

மழலை மான்!

மான் கண்ட மழலைக்கு 
தேன் உண்ட மகிழ்வோ!

ஈர் மழலை கண்ட மானுக்கு,
மாரி பெய்திட்ட குளிரோ!

கன்று இரண்டு அருகில் நிற்க,
கட்டி இறுகித் தழுவி நிற்க,
காண்பது மா மழையோ,
இது மழலையின்
அன்பு மழையே!

கார் மேகம் தூவாமல் காத்திருக்க,
கனக பூ மலராமல் மௌனிக்க,
பூலோகம் சுற்றாமல் வியக்க,
ஊர் கவனம் இங்கே நிற்க,
பரிமாறுவது அன்புதான்,
மனிதன் மறந்த அன்பை,
மழலை நினைவூட்டட்டும்,
அன்பே என்றும் அறம்,
அன்பே சிறந்த தவம்!

-செல்வா!

Tuesday, 5 November 2019

இந்த நாள் இனிய நாளே!

உலகில் யாதோர் மூலையில்,
நினையாதவை நிகழும் பொழுது,

உலகில் யாதோர் மூலையில்,
முடியாதவை நிகழும் பொழுது,

பூவாய் புலர்ந்த இந்நாள்
இலங்கும் பொன் நாளே!

புவிக்கோர் கதிரவன் உண்டு,
அவன் வந்து சென்று உயிரூட்டம் கொடுப்பதுண்டு!
அங்ஙனமே மனிதனுக்கோர் மனமுண்டு அதில் நல்லெண்ணம் பல முளைப்பதுண்டு!

மனமென்னும் தோட்டத்தை
மாயையில் மயங்காமல் பேணுவோம்!
நல் எண்ணம் தனை விதைத்து,
தீய எண்ணம் தனை அகற்றிடுவோம்!
ஒரு உழவன் போல் மனதினை தேற்றுவித்தால்!
ஐம்புலமும் நலமாகும் நல்லவை சாத்தியமாகும்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!