செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 31 December 2018

புதுவருடப்பிறப்பு!

நிகழ்வது எல்லாம் நொடிகளில் நிகழ்ந்தது!
நிற்காமல் வேகமாய் நிமிடம் சென்றது!
மழை போன்று விரைவில் மணி பாய்ந்தது!
கட கட வென காலங்கள் ஓட்டமாய் கடந்தது!

ஆண்டு இறுதி நாளில் வந்தது, இவ்வாண்டில்...
நினைக்க நிறைய ஆனந்தமான தருணமுண்டு!
களித்து சிரித்து மகிழ்ந்த பல நேரமுண்டு!
பி.எஸ்.எல்.வி சீறிப்பாய்ந்து இலக்கை அடைந்ததும் உண்டு!

இயற்கை பேரிடரின் கோரமுகமும் உண்டு!
போராட்டத்தில் உயிர் மாய்த்த தியாகரும் உண்டு!
பலர் பிடியில் சிக்கித்தவித்த சிறுமிகளுமுண்டு!
பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்ததுண்டு!

இன்னமும் எல்லாம் சொல்ல செய்தியாகும்!
இதை கூட சொல்லாவிட்டால் பாவமாகும்!

இந்த வருடம் கற்றுத்தந்ததை நினைவில் கொள்வோம்!
சென்றதை விட்டு மீண்டு வெளியே வருவோம்!
வரும் காலம் இனிதாக நிறைவேற, சரியான இலக்கையமைப்போம்!
வள்ளுவன் போல் அதற்கென திட்டமிடுவோம்!
தமிழ் போல் செழித்து வளர்வோம்!
திங்கள் திங்களாய் கதிரவன் போல் ஒளிர்வோம்!

நம்செயலால் அன்பு பெருகட்டும்!
நம் குணத்தால் அறம் தழைக்கட்டும்!
நம் வாழ்வால் தமிழ் சிறக்கட்டும்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

-செல்வா



Friday, 28 December 2018

அன்பின் தூரம்!

அருகில் இல்லாத குறையை கைப்பேசி தீர்த்ததோ!
அன்பான வார்த்தைகளை  அலைக்கற்றை கடத்துதோ!
துடிக்கும் இதயத்தை துல்லியமாக மின்செயலி காட்டுதோ!
தூரம் சிறிதானதே தொலைத்தொடர்பு உள்ளவரை!

இன்றளவில் நெருங்கா இடமுமில்லை அடையா சிகரமுமில்லை!
பெண்ணின் இதயமும் அவளின் எண்ணமும் மட்டுமே விஞ்ஞானிக்கும் விளங்கவில்லை!

விண்கலம் ராகுக்கு சென்றாலும்!
செயற்கைகோள் இருமுறை புவியை சுற்றினாலும்,
இவளின் மகிழ்ச்சியோ ஈர்வார்த்தையிலே அடங்கியிருக்கும்!

தேவை என்பதோ இவளுக்கு சிறியதே,
நாம் தேங்கி நிற்க இவள் மனம் விரும்புதே,
அடங்கா அன்பை அமிழ்தமாய் இமிழுதே!
இதுவே மகிழ்வென மனமும் மயங்குதே!

-செல்வா





Tuesday, 25 December 2018

வேலையில்லா பட்டதாரி!

கனவு துரத்தும் பலரில் நானும் ஒருவன்,
கடனை அடைக்க தவிக்கும் பலரில் ஒருவன்,
அடைக்கலம் புக புகலிடமில்லாத ஒருவன்,
உலக விலைவாசிக்கு தேரமுடியாத ஒருவன்,

என்ன தான் பிரச்சனை இங்கு?
என் தலைக்கேறவில்லை இங்கு!
என்னில் பிரச்சனையா?
இல்லை இச்சமூகத்திலா?

எத்தனை எத்தனையோ துயரம் கடந்து படித்தும்,
அத்தனை கனவும் பலிக்கும் என நினைத்தும்,
வந்திங்கு சேர்ந்தோம் ந(க)ரத்தில் புகுந்தோம்!

நடை நடையாய் முகவரி கொடுத்தாகியது,
பல தடவை நேர்முக தேர்வு நடந்தாகியது,
படித்தது கேட்கவில்லை,
கேட்டது தெரியவில்லை!
சிபாரிசிற்கோ ஆளில்லை!
மேல படிக்கவோ வழியில்லை!
வறுமை விட்ட பாடில்லை!

எதுவும் மாறவில்லை மாறும் என்ற நம்பிக்கையை தவிர!

வித விதமாக மின்னொளி மிளிரும் நகரில்,
என்றாவது மிளிரும் நல்குவோர் வாழ்வும் அதன் நலமும்!

-செல்வா







Friday, 21 December 2018

வண்ணம்!

வண்ணம் என்பது வெளியில் இல்லை!
வண்ணம் என்பது நமது பார்வையில் உள்ளது!

ஒரு விரல் போதும் சூரியனை மறைக்க!
ஓர் கூரிய பார்வை போதும் இரையை பிடிக்க!
இரண்டும் பார்வையே வேற்றுமை அதிகமே!

விரல் நகட்டி கண்ணை சற்று குவித்து நோக்குக!
நோக்க ஓராயிரம் பாக்கியம் ஈராயிரம்!

ஓட கால்களுண்டு, உறங்க இடமுண்டு!
கதைக்க உறவுண்டு,
விளையாட கைப்பேசி உண்டு!
கேட்க நல்ல செவி உண்டு,
ஐம்புலம் சீரிய இயக்கமுண்டு,
எத்தனை கொண்டாட்டமிங்கே!
எத்தனை மகிழ்வு இங்கே!

இதனை மட்டுமே பார்ப்போம்!
மற்றவை புறம் தள்ளுவோம்!

மகிழ். திகழ். புகழ்

-செல்வா

Friday, 14 December 2018

தேநீர்ப்பொழுதுகள்!

தேநீர் பொழுதுகளையும்,
தேயாத நீளும்  இரவுகளையும்,
தேடும் பருவம் இளமை பருவம்!
அதிகாலை முதல் அந்தி மாலை வரை,
ஒவ்வொரு கோப்பைக்கான நேரமும் பல உணர்வுகளை,
ரசிக்கவும், கடக்கவும், புது நம்பிக்கை பிறக்கவும் வைக்கிறது!

வாழ்வில் நடப்பதை ரசிக்க,
சற்று தள்ளி நின்று அசைபோட,
தோன்றும் பொழுதல்லவா தேநீர் பொழுது!

நம்பிக்கைக்கு வித்திடும் பொழுது,
நல் திட்டங்கள் தீட்ட உகந்த பொழுது,
களித்திருக்க உவகையான பொழுது,
பிழைத்திருக்க தெம்பூட்டும் பொழுது,
இணைந்திருக்க அன்பு கூட்டும் பொழுது,
சுவைத்திருக்க சுகமூட்டும் பொழுது,
நட்பிற்கோ அதுவே பிரதான பொழுது! 
பல பழுதுகளை சரிபார்க்கும் பொழுது!

தேநீர் பொழுதுகள் ஏற்படுத்திய திருப்பங்கள் பல பல! 
திருப்பங்களை கடப்பதே வாழ்வின் இலக்காகும்! 
எதுவரினும் தினம் ஓர்பொழுது வேண்டும்,
கோப்பை தேநீரோடு எல்லாம் களையும் பொழுதாய்! 
திகழ, மகிழ இன்புற்றிருப்போம்!

-இனிய தமிழ் செல்வா

Sunday, 9 December 2018

தந்தை, தாய் பேண்! 

பாதையறியா பால்யத்தில் பயமில்லை!
பாதைமாறி செல்லினும் ஐயமில்லை!

பருவம் தொட்ட பின்னும் பயமில்லை!
பரந்த உலகமாயினும் தொலைவில்லை!

கல்வி முடிந்த பின்னும் பயமில்லை!
தொழில் மாறி போகினும் ஐயமில்லை!

கணவனான பொழுது சற்று தொற்றியது!
தந்தையான பின்பு முற்றும் பற்றியது!

இத்தனை நாள் இல்லாத ஒழுக்கத்தை,
தந்தை என்ற ஓர் உறவு தருகிறதே!
போதையாய் பேதையாய் இருந்த மனம்,
தன்னிலை கண்டு நிலைகொண்டதே!

கார் இருள் படாமல் நம்வாழ்வு மிளிரவும்,
பிற ஒளி பட்டு குன்றாமல் வாழ்வில் திகழவும்,
நாற்கரம் மல்லவா நம்மை காத்தது,
ஈர் உயிர்களல்லவா தவம் செய்தது,
இதை மறப்பின் ஏதும் கிட்டிலன் வாழ்வில்!

மனிதன் தாய், தந்தையின் அருமை உணர எடுக்கும் காலம் அதிகமே!
சுருங்கிய குடும்பத்தில் இன்னமும் சுருக்கம் வேண்டாமே!

வளர்த்த கடனை அன்பினாலே திருப்பியளிப்போம்!
எவ்வளவு கொடுப்பினும் ஈடுகட்ட இயலா நன்கொடை அது!

அன்பினால் சூழுவோம் பண்பினால் பரிசளிப்போம்!
இந்த நிமிடம் முதல் துவங்குவோம்!

-செல்வா


Thursday, 6 December 2018

எளிமை!

எளிமையை எள்ளி நகைக்கிறார்கள்!
வாழ்வில் செல்வம் உயர ஆடுகிறார்கள்!
ஆடம்பரமே முன்னேற்றம் என்ற மமதை!

எளிமைக்கும் ஆடம்பரத்திற்கும்,
நூல் அளவே வித்தியாசம்!
தேவைக்குச் செய்தால் எளிமை, காண்பிக்கச்செய்தால் ஆடம்பரம்!

வளர்ச்சி எனும் போர்வை ஆடம்பரத்தைக் காக்கிறது!
ஆற,அமர இயங்கும் மனிதனை பறந்து பறந்து ஓடச்செய்கிறது!

எவ்வளவு செல்வம் சேரினும் இன்றளவில் போதுமானதாகவில்லை!
இதைவிட இன்னும் சிறப்பாக வேண்டும் என்று இருப்பதை உணரவில்லை!

ஓர் கடன் வாங்க,
அது சுமையாக மாற,
வண்டிமாடு போல் சுமை,
கடன் சுமை இழுக்கிறார்கள்!
இருப்பதைக் கொண்டு சேமித்து,
வாழ்பவர் நவ உலகின் சாமர்த்தியசாலி!

எல்லாம் சிறப்புற குழந்தைகளுக்கு தர தேவையில்லை!
உங்கள் அன்பை சிறப்புற அளியுங்கள், பொன்னான நேரத்தை அளியுங்கள்!

அன்பான சூழலிலும் அரவணைப்பில் வளரும் குழந்தையே நல்ல குடிமகனாவார்
வீட்டிற்கும் நாட்டிற்கும்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா

Monday, 3 December 2018

வாழ்க்கை ஓட்டம்!

வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம்,
அதை ஓடித்தான் பார்ப்போம்,

பல வேளை காலுக்கு நல்ல செருப்பு  கிடைக்கலாம்,
சில வேளை ஓட நல்ல தரை கிடைக்கலாம்,
எது கிடைப்பினும் ஓட்டம் நிற்பதில்லையே!

முள் ஏறினாலும் புல் மீது ஓடினாலும் அனுபவமே,
அதை அனுபவிக்காமல் உணர முடியா காரியமே!

ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாதைகள் இங்கு!
ஒவ்வொருவருக்கும் தனித்தனி வேகங்கள் இங்கு!
ஆனால் பாதைவழி வரும் இடர்கள் எவர்க்கும் உரியதே!

ஓடும் ஓட்டத்தில் சில காலம் துணைவரலாம்,
ஓடும் பாதையில் சில நேரம் இளைப்பாருமிடம் வரலாம்!

தகும் உடல் மனிதன் கொண்டான்,
தடம் பதித்து பாதையில் ஓடலானான்,
புத்தம் புதிய பாதை எங்கும் பிறந்தது,
ஆக்கபூர்வமான பயன் கைமேல் கிடைத்தது!

உலகம் சுற்றினால் தான் இயங்கும்!
மனிதம் ஓடினால் தான் சிறக்கும்!

இங்கு ஓட்டம் என்பது பந்தயமல்ல,
நேர்த்தியான வாழ்வுக்கான தேடலே...

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா



Saturday, 1 December 2018

சிந்தனை அரும்பு!

சொல்ல முடியா துயரத்திற்கு கூட மருந்துண்டு,
ஆனால் தீராத ஆசைக்கில்லை மருந்து இவ்வுலகில்!

காணா கனவு கூட கைகூடும் முயற்சி இருப்பின்!
கிட்ட இருப்பது கூட எட்டாது சோம்பிக்கிடப்பின்!

எழுந்து நின்றால் நடப்பது சுலபமே!
நடக்கப் பழகினால் ஓடுவது
சுலபமே!
ஓட முடிந்தால் இலக்கடைவது  அண்மையே!
இலக்கடைந்தால் சான்றோன் ஆவது எளிதே! 

நமது எண்ணத்தில் என்ன உள்ளதோ,
அதுவே நமக்கு கின்னத்தில் கிடைக்கும்!
எண்ணம் சிறிது பிசக வாழ்க்கையும் பிசகுமே!
எண்ணத்தில் வண்ணம் சேர்க்க வாழ்வும் ஒளிருமே!

எண்ணங்கள் நன்றாக அரும்பட்டும்!
அலராக விரிந்து இனம் பெருகட்டும்!
முகிழாக கமழ்ந்து வாழ்வு மணக்கட்டும்!

விழி! எழு! விருட்சமாகுக!

-செல்வா