செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 30 August 2018

பெண்மை ஓர் தவம்!

ஓ பெண்ணே எத்தனை சவால் உன் முன்னே!
ஜனிக்கும் முன்பே போராட்டம் உன் முன்னே!

கருவிலிருந்து பெண் சிசுவாய் தப்பினாய்!
கள்ளிப்பால் கயவர்களிடமிருந்து தப்பினாய்!

பள்ளி செல்ல பாலராய் அடைபடாமல் தப்பினாய்!
மங்கையான பின்பு மீண்டும் பண்பினால் கற்க தப்பினாய்!
படித்த பின்பு பணி செல்ல மீண்டும் தடை தாண்டினாய்!

நங்கை உனக்கு எத்தனை தடைகள்!
மங்கை உனக்கு அத்தனையும் படிகள்!

இன்று நீ இல்லாத துறை இல்லை!
சாதிக்க வேண்டிய எல்லைக்கு மறுவரையறை செய்தாய்!
ஏறு முன்னேறு உன் பின் உள்ளவர்களுக்கு வழிசெய்!

இன்றும் நமதே!
நாளையும் நமதே!
முயற்சி நமதெனில்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா

Friday, 24 August 2018

ஆர்வம்!

புதுக்கவிஞனும் இல்லை!
புதிய தலைப்புமில்லை!
தேர்ச்சி பெற அவசியமுமில்லை!
காலத்தில் முடிக்கும் கடமையுமில்லை!
கருத்து தெரிவிக்கும் கட்டாயமுமில்லை!

பின் ஏன் இந்த ஆர்வக் கோளாறு என்று எண்ணி எண்ணி வியக்கிறேன்!
படைப்பாளியாக மாறாத காரணமோ!
கவிஞனாக உணராத காரணமோ!

கற்பனை வடித்துவிட்டு,
ஓரம் நின்று ரசித்தால் போதும்! 
சிறந்த கல் சாமியாகும்!
சிதறிய கல் படியாகும்!
பொறுமை கொள் மனமே!

-செல்வா...

Saturday, 18 August 2018

நட்சத்திரம் விழும் இரவு!

துணை தேடி காத்திருந்தேன்!
உன் விழி தேடி காத்திருந்தேன்!
இணையாக நீ இல்லாத பொழுதில்,
காண்பதெல்லாம் மாயமா என்ன?

காண்பதற்கு இதமாய் ஒளிரும் நிலா!
நிலவின் தோழிகள் போல் நட்சத்திரம்!
மௌனமே மையல் கொண்ட  இரவு!
உன் வாசம் வீசிச் செல்லும் தென்றல்!
உன் கைப்பற்ற துடிக்கும் இரு கரங்கள்!
வரவேற்பு எண்ணித்தவிக்கும் மனது!
இவையனைத்தும் சேர்ந்தது நட்சத்திரம் விழும் இரவல்லவா!

தாமதித்து போனால் அவைகள் கூக்குரலிடும்!
மெய் தீண்டி நினைவூட்ட பனி தென்றலாய் வரும்!
பக்குவமாய் எடுத்துக்கூற வண்டுகள் பவனி வரும்!
வா அன்பே வா! வந்திடு வா!

நட்சத்திரம் ஏக்கத்தில் விழுந்துவிடும் முன் வா!
நிலா ஒளி தராமல் கோபம் கொள்ளும் முன் வா!
காற்று சத்தமிட்டு வீசிடும் முன்வா!

இந்த இரவினை இன்னமும் நீட்டுவோம்!
நட்சத்திரம் விழும் இரவில் தாளம் மீட்டுவோம்!
புதிய கீதம் இசைத்து ஒன்றாய் ஒலிப்போம்!
காதல் ஒலிக்கட்டும்! அவள் காதில் ஒலிக்கட்டும்!

-செல்வா

Tuesday, 14 August 2018

சுதந்திரத் திருநாள்!

பலர் வீதியில் இறங்கி வென்றெடுத்த சுதந்திரம்!
வெள்ளை கொள்ளையனை விரட்டி வாங்கிய சுதந்திரம்!
அறவழியில் உலகில் நின்று வென்ற சுதந்திரம்!
சிதறிய தேசத்தை இணைத்து கோர்த்த சுதந்திரம்!
பல மேன் மக்கள் குருதியில் கிட்டிய சுதந்திரம்!

சுதந்திரம் என்ற இன்பத்தில்  திளைக்குது என்தேசம்!
உரிமையை மீட்ட நாளின் பெருமை பேசுது என்தேசம்!
தியாகிகளை நினைத்து மகிழுது என்தேசம்!
மகிழ நிறைய இருப்பினும், களைய நிறைய இருப்பினும்!
இரண்டிற்கும் இடையில் வளருது என்தேசம்!

உலகில் காணகிடைக்காத வேற்றுமைகள்!
அதனுள் சிறந்து விளங்கும் ஒற்றுமைகள்!
இங்கு தவிர எங்கும் காணாது!

எண்ணத்தில் உள்ள வேற்றுமையை ஒழிப்போம்!
வீட்டில் உள்ள சாதிகளை ஒழிப்போம்!
வீதிகளில் உள்ள தீண்டாமையை ஒழிப்போம்!
ஊரில் உள்ள குப்பைகளை ஒழிப்போம்!
நாட்டில் உள்ள தீவிரவாதத்தை ஒழிப்போம்!

அன்று ஒலிக்கும் இந்த சுதந்திரமணி,
கேட்காதவரின் காதை துளைக்கும்!
கரம் சேர்ப்போம், தூய பாரதம் படைப்போம்!

வாழ்க பாரதம்! வாழ்க தமிழ்நாடு!

-செல்வா

Sunday, 12 August 2018

வாழ்க்கை பயணம்! 

வாழ்க்கை பயணம் தொடங்கிய இடத்தில் முடிகிறது சற்று அனுபவங்களுடன்!

வாழ்வில் நாம் நாமாக இருப்போம்,
பிடித்தவர்கள் உடன் பயணிப்பார்கள்,
பிடிக்காதவர்கள் வழியில் இறங்கிவிடுவார்கள்...

இறங்கியவர் இடத்தை இன்னொருவர் நிரப்புவார்,
இல்லையேல் சில நேரம் காலியான இருக்கையுடனே பயணங்கள் தொடரலாம்.
துணைக்கு ஆள் இல்லாத பயணம் எல்லாம் வீண் இல்லை!
பல நேரங்களில் தனியாக நடப்பவர்கள் வெகுதூரம் பயணிக்கிறார்கள்!
தூரம் சிறிதாக தோன்றும் துணை இருப்பின்!

கற்றுக்கொண்டே இருந்தால் வாழ்க்கை எளிதே!
செல்லும் வழி முழுவதும் நோக்கிச்சென்றால் தொல்லையில்லை!
நோக்காவிடின் மேடும், பள்ளமும் புரட்டி புரட்டி போடும்!

காலம் என்னும் கருவியில் நாம் செய்யும் பயணம் பதிவாகிறது!
பதியும் படி வழி நெடுக நடந்தால் அது காலத்திற்கு சன்மானமே!

வேகம் அறிந்து, இளைப்பாறி, களைப்பாறி, பதற்றப்படாமல் பயணிப்போம் வாழ்க்கை பயணம் இனிதே!

-செல்வா 


Wednesday, 8 August 2018

திராவிடச் சூரியன்

ஓயாமல் உழைத்தவர் இதோ ஓய்வு எடுக்கிறார்...

தமிழ் அன்னையின் மடியில் துயில் கொண்ட கலைஞா!
ஓயாது உழைத்த உன் ஓய்வு இதோ அண்ணாவின் பக்கத்தில்!

கடன் வாங்கிய இதயம் அதன் இருப்பிடத்திற்கு சென்றது!
கரகரத்த குரல் இனி எம்காதில் ஒலிக்காதென்பதில் மனம் பதைக்கிறது!

உன் திறமைகளை வார்த்தைகளில் அடைக்க இயலா!
தமிழுக்கு நீர் ஆற்றிய கடமையை ஒருவரும் மறக்க இயலா!

தமிழ் பார் எங்கும் ஒலிக்க செம்மொழியாக்கினாய்!
பலதலைமுறை காண தமிழை கணிணியில் ஏற்றினாய்!
திருவள்ளுவர்க்கு ஒய்யாரமாய் குமரியில் சிலை வடித்தாய்!
தமிழ், தமிழ் என எங்கும் முழங்கி நீர் இந்தி திணிப்பை எதிர்த்தாய்!

கொள்கை முழக்கங்கள்,
காலம் மறவா கடிதங்கள்,
கன்னித்தமிழ் கவிதைகள்,
சுவைமிகு நாடகங்கள்,
உணர்ச்சியான வசனங்கள்,
இவை நீர் காற்றில் கலந்தாலும்,
தமிழ் உள்ளவரை நீளும்!
தமிழ் உள்ளவரை வாழும்!

பகைவரும் உன்னிடம் அரசியல் பயில விரும்புவார்!
பிறமொழியினரும் உன் தமிழ் கேட்க விரும்புவார்!
போராட்டத்தின் மறுபெயரான கலைஞா நீர் துயில் கொள்!

இந்த நாடும், வீடும் தலைவரிழந்த மொட்டைக்காடாய் காட்சி தர,
திராவிடம் தன் ஓயாத பயணத்தை அடுத்ததலைமுறையிடையே பயணிக்கிறது!

சமூகநீதி வாழ்க!

-செல்வா

Sunday, 5 August 2018

நிஜம்!

நிழலும் நிஜம் தான், சூரியன் மேலிருக்கும் வரை!
நினைவுகள் நிஜம் தான், உடலில் உயிர் இருக்கும் வரை!
வாய்ப்புகள் நிஜம் தான், தேடல் உள்ளவரை!
வெற்றி நிஜம் தான், மனதில் உறுதி உள்ள வரை!
வார்த்தை நிஜம் தான், நோக்கம் நல்லதாக உள்ளவரை!
அன்பு நிஜம் தான், இரு மனம் இணைந்து இருக்கும் வரை!
வாழ்வு நிஜம் தான், நாம் மண்ணில் உள்ளவரை!

வாழும் வாழ்வை அன்பினால் ஆள்வோம்!
இணக்கம் கொள்வோம்!இன்புற்றிருப்போம்!

-செல்வா

Wednesday, 1 August 2018

வாலிபம்!

வாலிபம் மரணம் வரை மனிதன் வாழ விரும்பும் பருவமது!
மது தரும் போதையும்,
மதி கெடும் பேதையும் விலக்கி வைத்திருப்பவர்கள் சிலரே!

அவ்வாறு இலரே மாதுவின் மயக்கமாய்! காமத்தில் கலக்கமாயிருப்பர்!

இப்படியுமிலரேல் சூதிர்க்கு அடிமையாய்,
நேரவிரயமாக்கும் வீரராய் வீற்றிருப்பர்!

இம்மூன்றிலிருந்து தப்பியவன்!
வாலறிவன்!
ஐம்புலத்தை அடக்கி ஆள்பவன்!

பாரதி கூறினான் இளமையில் வறுமை கொடியது என்று!
ஆனால் இக்காலம் அதற்கு நேர்மாறானது!

இளமையில் வறுமை ஆகச்சிறந்தது!
வறுமை மது, மாது, சூது இம்மூன்றிலிருந்தும்,
வாலிபனை விலக்கி வைக்கும்!

இம்மூன்றிலிருந்து மீண்டவன்!
இன்னொரு விவேகா ஆவான்!
ஆற்றல் மிகுந்த வாலிபத்தை அடக்கி ஆளும்,
வல்லமை ஒவ்வொரு இளைஞருக்கும் வேண்டும்!

சோம்பித் திரியாமல்!
கற்பவைகளை கற்று!
திறமைகளை வெளிக்கொணர்ந்து!
அறிவான சமுதாயத்திற்கு வித்தாய்!
முளைவிட்டு வேர்பிடித்து!
மரமாய் வளர்ந்து பயன்தருக!

இந்த உலகம் நமக்கு அளித்த வாழ்விற்க்கு!
இரட்டிப்பு பலன்தருக!

விழு! எழு! விருட்சமாகுக!

-செல்வா